- Home
- Astrology
- தை மாத ராசி பலன் 2026: மிதுன ராசிக்கு அதிஷ்டமும், ஆபத்தும் காத்திருக்கு.! என்ன விஷயம்னு பாருங்க.!
தை மாத ராசி பலன் 2026: மிதுன ராசிக்கு அதிஷ்டமும், ஆபத்தும் காத்திருக்கு.! என்ன விஷயம்னு பாருங்க.!
Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
Thai Matha Rasi Palan 2026 Mithunam: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம் புதிய வாய்ப்புகளையும், அதிரடி திருப்பங்களையும் தரக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் மறைந்திருக்கும் புதன் பகவானல் நிறைந்த பண வரவு கிடைக்க இருக்கிறது.
அதே சமயம் சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வலிமை அடைவதால் திடீர் திருப்பங்கள், மன அமைதி குறைவு, ஆரோக்கியத் தொல்லை, கடன் நெருக்கடி, குடும்ப பாரம் அதிகரிப்பு ஆகியவையும் உண்டாகக்கூடும். மனதை அமைதியுடன் வைத்து, நிதானத்துடன் செயல்பட்டால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும்.
தொடர்புடைய கட்டுரைகள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/thai-matha-rasi-palan-2026-thai-matha-palan-rishaba-rasi-palangal-in-tamil-p3rt1l9
குரு சஞ்சார பலன்கள்:
இந்த மாதம் முழுவதும் குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகமாக குரு விளங்கி வருகிறார். அவர் வக்ரம் பெறுவது ஒரு வழியில் நன்மையை தர இருக்கிறது. ஜென்ம குருவாக இருக்கும் காரணத்தால் இடம் மாற்றம், வீடு மாற்றம், சிலருக்கு ஊர் மாற்றம் போன்றவை ஏற்படும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நன்மை தரும். குரு பகவானின் நிலை காரணமாக திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
குருவின் பார்வை 5,7,9 ஆகிய வீடுகளில் விழுகிறது. இதன் காரணமாக எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறுவதற்கு குரு பகவானின் பார்வை சாதகமாக இருக்கும். சம சப்தம ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கைவிட்டுப் போன வரன்கள் திரும்ப வரலாம். ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு திறமைக்கேற்ற மற்றும் கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.
தொடர்புடைய கட்டுரைகள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/thai-matha-rasi-palan-2026-thai-matha-palan-mesha-rasi-palangal-in-tamil-o9co16e
புதன் சஞ்சார பலன்கள்:
உங்கள் ராசிநாதனான புதன் நான்காம் இடத்திற்கு அதிபதியாக விளங்கி வருகிறார். அவர் 29-01-2026 கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக உங்கள் ராசியின் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் கடன் தொல்லைகள் தீரத் தொடங்கும். பணம் கொடுக்கல் மற்றும் வாங்கலில் இருந்த சிக்கல்கள் விலகும். தாய்மாமன் மற்றும் மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். அவர்களின் இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்வுகளை தலைமையேற்று நடத்துவீர்கள்.
பெற்றோர்களின் வழியில் இருந்த பிரச்சனைகள், மன ஸ்தாபங்கள் படிப்படியாக நீங்கும். பெற்றோர்கள் மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை உங்களிடமும் காட்டுவார். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள், அவமானங்கள் மாறும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
சுக்கிரன் சஞ்சார பலன்கள்:
மாதத்தின் தொடக்கத்தில் மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்கிர பகவான் பிப்ரவரி 7, 2026 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரனின் இந்த நிலை காரணமாக தொழில் மாற்றம் பணியிட மாற்றம் ஏற்படலாம். குரு மற்றும் சுக்கிரனின் பார்வை இருப்பதால் சற்று மனக்குழப்பங்கள் ஏற்படலாம். எந்த வேலையை செய்தாலும் அதில் முழுமையாக திருப்தி ஏற்படாது. இருப்பினும் சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக ‘நடக்காது’ என்று நினைத்த காரியங்கள் கூட நடக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.
பெண் பிள்ளைகளுக்கு திருமண யோகம் கைகூடும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். மாதத்தின் முற்பகுதி வளர்ச்சியும், பிற்பகுதி சற்று தளர்ச்சியையும் கொடுக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டில் வளைகாப்பு, புதுமனை புகுவிழா, திருமண நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை மற்றும் தாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியைக் காண்பீர்கள்.
பரிகாரங்கள்:
புதன்கிழமை தோறும் மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது. புதன்கிழமைகளில் பச்சை பயிறு தானம் செய்வது நன்மைகளை இரட்டிப்பாக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், பேனா வாங்கி கொடுப்பது ஆகியவை கிரக தோஷங்களை குறைக்கும். திருச்சி திருவரங்கத்தில் அமைந்துள்ள நம்பெருமாளை தரிசிப்பது கோடி புண்ணியம் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

