- Home
- Astrology
- Astrology: விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்.! நவ.16-க்குப் பிறகு ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Astrology: விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்.! நவ.16-க்குப் பிறகு ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Sun Transit in Scorpio 2025: நவம்பர் 16 ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சி 2025
நவகிரகங்களில் தலைவனாகவும், ஆற்றல், அதிகாரம், தன்னம்பிக்கை, ஆளுமை, அரசாங்கம், தலைமைப் பதவி ஆகியவற்றை குறிக்கும் காரகராகவும் சூரிய பகவான் விளங்கி வருகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மேன்மை, புகழ், அரசாங்க வேலை, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறுவர். தற்போது துலாம் ராசியில் சூரிய பகவான் பயணித்து வருகிறார்.
துலாம் ராசியானது சூரிய பகவானுக்கு நீச்சமடையும் (பலவீனமான) ராசியாகும். இதன் காரணமாக அவரின் ஆற்றல் பெரிய அளவில் வெளிப்படவில்லை. இந்த நிலையில் அவர் நவம்பர் 16, 2025 விருச்சிக ராசிக்கு செல்ல இருக்கிறார். இந்த பெயர்ச்சியானது தனிப்பட்ட வாழ்க்கையிலும், உலக அளவிலும் மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார். சூரியன் உங்கள் லக்ன வீட்டில் சஞ்சரிப்பது பொற்காலம் தொடங்குவது போன்ற பலன்களைக் கொடுக்கும். தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு, அதிகாரிகளிடமிருந்து பாராட்டு ஆகியவை கிடைக்கும்.
அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சமூகத்தில் மரியாதையும், செல்வாக்கும் உயரும். அரசாங்கத்தால் நன்மை அடைய வாய்ப்பு உண்டு. இருப்பினும் இந்த நேரத்தில் அதிகம் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும் உடல் ஆரோக்கியம் குறிப்பாக கண் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.
மகரம்
மகர ராசியின் 11-வது வீடான லாப ஸ்தானத்திற்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார். இது ராஜயோகம் தரும் நிலையாகும். லாப ஸ்தானம் என்பதால் உங்கள் நிதிநிலை மேம்படும். பல்வேறு பணிகளில் இருந்து பணவரவு தாராளமாக கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் பெரிய ஆர்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கைகூடும்.
உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உங்கள் நீண்ட கால லட்சியங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவுகள், ஆசைகள் நிறைவேற தொடங்கும்.
சிம்மம்
சூரியனை ராசிநாதனாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் நான்காவது வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக புதிய சொத்து, வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். நீண்ட காலமாக இருந்த கனவுகள் நிறைவேறும். தாய் வழி உறவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். தாய் வழி மூலம் பரம்பரை சொத்துக்கள் மூலம் பண வரவை எதிர்பார்க்கலாம். தொழில் ரீதியாக பதவி உயர்வு அல்லது பணியிட மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் உங்கள் ராசியில் இருந்து ஐந்தாவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகவும் சாதகமான நிலையாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளின் விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆன்மீக விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். தன்னம்பிக்கை உயரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் எட்டாவது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். பொதுவாக எட்டாம் இடத்தில் சூரியன் மறைவது அவ்வளவு நல்லதல்ல. என்றாலும் மேஷ ராசிக்கு சூரியன் ஐந்தாம் வீட்டின் அதிபதி என்பதால் சில சாதகமான விளைவுகள் உண்டாகும். எதிர்பாராத பண ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகம் மற்றும் பிற விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் ஆரோக்கியம் மற்றும் பயணங்களின் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)