- Home
- Astrology
- Astrology: புதன் பகவானுக்குப் பிடித்த 4 ராசிகள்.! இவங்க தொழிலில் அம்பானி மாதிரி கொடி கட்டிப் பறப்பாங்களாம்.!
Astrology: புதன் பகவானுக்குப் பிடித்த 4 ராசிகள்.! இவங்க தொழிலில் அம்பானி மாதிரி கொடி கட்டிப் பறப்பாங்களாம்.!
lord Mercury favorite zodiac signs: ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இந்த பதிவில் அவருக்கு பிடித்த ராசிகள், அவர் உச்சம் பெரும் ராசிகள், நீச்சம் பெறும் ராசிகள், நட்பு ராசிகள் உள்ளிட்ட அனைத்தும் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

புதன் பகவானுக்கு பிடித்த ராசிகள்
வேத ஜோதிடத்தில் புதன் பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். அவர் பேச்சு, கல்வி, வணிகம், பகுத்தறிவு, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். புதனின் தாக்கம் ஒரு நபரின் மனதின் தெளிவு, வாக்கு வன்மை மற்றும் சிந்தனைத் திறனை பாதிக்கிறது. இந்த பதிவில் புதனுக்கு பிடித்தமான ராசிகள் எவை? அவர் எந்த ராசியில் வலிமையாக இருக்கிறார்? எந்த ராசியில் பலவீனமாக இருக்கிறார்? ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகவான் பலவீனமாக இருந்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
புதன் வலிமையாக இருக்கும் ராசிகள்
ஜோதிட ரீதியாக ஒரு கிரகம் தனது சொந்த வீட்டில் ராசியில் இருக்கும் பொழுது மிகவும் வலிமையுடன் இருக்கும். இந்த நிலையை ‘ஆட்சி வீடு’ என்று கூறுவார்கள். அந்த வகையில் மிதுன ராசியானது புதனின் முதல் ஆட்சி வீடாகும். மிதுனம் என்பது இரட்டைத் தன்மை கொண்ட காற்று ராசியாகும். இந்த ராசியில் புதன் மிகவும் வசதியாகவும், வலிமையாகவும் இருக்கிறார்.
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் புத்திசாலித்தனம், வாக்கு வன்மை, தகவல் தொடர்பு திறன்களை வழங்குகிறார். இந்த ராசியில் புதன் தனது இயல்பான குணங்களை முழுமையாக வெளிப்படுத்துவார். மிதுன ராசிக்காரர்கள் வணிகம், எழுத்து மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
புதன் உச்சம் பெறும் ராசிகள்
கன்னி ராசியானது புதனின் இரண்டாவது ஆட்சி வீடாகும். கன்னி என்பது பூமி ராசியாகும். இந்த ராசியில் புதன் மிகவும் வலுவாக இருக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் பகுப்பாய்வு செய்யும் திறன், திட்டமிடும் ஆற்றல், விவரங்களை சேமிக்கும் ஆர்வம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை வலுப்பெறச் செய்கிறார்.
கன்னி ராசியானது புதனின் உச்ச ராசியாகவும் கருதப்படுகிறது. ஒரு கிரகம் தனது சொந்த ராசியிலேயே உச்சம் பெறுவது ஒரு அரிய மற்றும் சக்தி வாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. கன்னி ராசியில் புதன் உச்ச வலிமையுடன் இருக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான கல்வி, கூர்மையான அறிவு, தர்க்கரீதியான சிந்தனை, கணிதம், ஜோதிடம், எழுத்து, வணிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
புதனின் நட்பு ராசிகள்
துலாம்: துலாம் ராசியானது புதன் பகவானின் நட்பு ராசியாக விளங்குகிறது. இங்கு புதன் சமநிலையான மனநிலை, நியாயமான பேச்சு மற்றும் ராஜதந்திர திறன்களை வழங்குகிறார். துலாம் ராசிக்காரர்கள் புதனின் ஆதிக்கம் காரணமாக பேச்சுத்திறன் மற்றும் உறவுகளை நிர்வகிக்கும் திறனில் சிறந்து விளங்குகிறார்கள்.
கும்பம்: அதேபோல் கும்ப ராசியும் புதன் பகவானின் நட்பு ராசியாக கருதப்படுகிறது. இங்கு புதன் பகவான் புதுமையான சிந்தனை, அறிவியல் ஆர்வம், சமூக உணர்வு ஆகியவற்றை வழங்குகிறார். கும்ப ராசிக்காரர்கள் புதனின் தாக்கம் காரணமாக புதிய யோசனைகளை உருவாக்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
புதன் நீச்சம் பெறும் ராசி
புதன் பகவான் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார். அப்படி என்றால் புதன் பகவான் மீன ராசியில் இருக்கும் பொழுது பலவீனமாக இருப்பதாக அர்த்தம். இதனால் அவரது இயல்பான குணங்களான பகுத்தறிவு, தெளிவான சிந்தனை, தகவல் தொடர்பு திறன் ஆகியவை குறைவாக வெளிப்படும்.
மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமாகவும் கற்பனை திறன் மிக்கவர்களாகவும் இருப்பதால் புதன் பகவானின் பகுத்தறிவு குணங்கள் மீன ராசியில் சற்று குறைவாகவே வெளிப்படும். மீன ராசியில் புதனின் ஆதிக்கம் இருக்கும் சமயத்தில் முடிவெடுப்பதில் குழப்பம், தெளிவின்மை, உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை அனுபவிக்கலாம்.
புதன் பகவான் அருளைப் பெற பரிகாரங்கள்
புதன் பகவானின் தாக்கத்தை மேம்படுத்துவதற்கு பச்சை நிற ஆடைகள் அணிவது, பச்சை நிறப் பொருட்களை பயன்படுத்துவது உகந்ததாகும். புதன்கிழமை புதன் பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் புதன் பகவான் தொடர்பான மந்திரங்களை உச்சரிப்பது, பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். பச்சை மூங்கில், பச்சை பயிறு போன்றவற்றை தானம் செய்வது, புதன் ஹோரையில் புதன் மந்திரங்களை ஜெபிப்பது, பச்சை மரகதக் கல் அணிவது ஆகியவை புதன் பகவானின் ஆற்றலை உங்களுக்கு நேரடியாக வழங்கும்.
புதன் பகவான் மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிகளில் வலிமையாக செயல்படுகிறார். கன்னி ராசியில் உச்சம் பெறுவதால் அங்கு அவர் தனது முழு ஆற்றலை வெளிப்படுத்துகிறார். மீன ராசியில் நீச்சம் பெறுவதால், அவர் மீன ராசிக்காரர்களுக்கு குறைவான பலன்களையே வழங்குகிறார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)