Birth Star: உங்க பிறந்த நட்சத்திரம் இதுதானா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
Birth Star: பிறந்த நட்சத்திரம் என்றால் என்ன? 27 நட்சத்திரங்கள், 4 பாதங்கள், நட்சத்திர அதிபதி, ராசியுடனான தொடர்பு, பெயர் வைக்கும் முறை, திருமணப் பொருத்தத்தில் அதன் பங்கு உள்ளிட்ட முக்கிய தகவல்களை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.

பிறந்த நட்சத்திரம்
நான் எந்த நட்சத்திரத்தில் பிறந்தேன்? ஜாதகம் பார்க்கும்போது முதலில் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ராசி, லக்னம் போலவே பிறந்த நட்சத்திரத்திற்கும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவரின் பிறந்த நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரப் பகுதியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்பதன் அடிப்படையில் ஜென்ம நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது.
அதனால் உங்கள் நட்சத்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், அந்த நட்சத்திரத்தின் அதிபதி யார்? எத்தனை பாதங்கள் உள்ளன? எந்த ராசியில் வருகிறது? பெயர் வைக்க உதவும் எழுத்துக்கள் என்ன? என்பது போன்ற தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பதுர பயனுள்ளதாக இருக்கும்.
ஜென்ம நட்சத்திரம் என்றால் என்ன?
வேத ஜோதிடத்தில் சந்திரன் பயணிக்கும் பாதை 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாக பிரிக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருந்தாரோ, அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
27 நட்சத்திரங்கள் எவை?
- அஸ்வினி
- பரணி
- கார்த்திகை
- ரோகிணி
- மிருகசீரிஷம்
- திருவாதிரை
- புனர்பூசம்
- பூசம்
- ஆயில்யம்
- மகம்
- பூரம்
- உத்திரம்
- ஹஸ்தம்
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- அனுஷம்
- கேட்டை
- மூலம்
- பூராடம்
- உத்திராடம்
- திருவோணம்
- அவிட்டம்
- சதயம்
- பூரட்டாதி
- உத்திரட்டாதி
- ரேவதி
நட்சத்திரம் எப்படி தெரிந்து கொள்வது?
பிறந்த நட்சத்திரத்தைத் துல்லியமாகக் கணக்கிட பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய மூன்று தகவல்களும் முக்கியமானவை. குறிப்பாக, பிறந்த நேரத்தில் சில நிமிடங்கள் வித்தியாசம் ஏற்பட்டாலும், அந்த நேரத்தில் சந்திரன் நட்சத்திர எல்லைக்கு அருகில் இருந்தால் நட்சத்திரப் பாதம் மாறக்கூடும்.
எனவே நினைவில் உள்ள தோராயமான நேரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்வதைவிட, பிறப்புச் சான்றிதழ் அல்லது குடும்பத்தில் பதிவு செய்யப்பட்ட சரியான பிறந்த நேரத்தைப் பயன்படுத்துவது சிறந்தது.
நட்சத்திரம் மற்றும் ராசி ஒன்றா?
நட்சத்திரமும் ராசியும் ஒன்றில்லை.ராசி என்பது சந்திரன் அமைந்துள்ள 12 ராசிகளில் ஒன்று. நட்சத்திரம் என்பது சந்திரன் அமைந்துள்ள 27 நட்சத்திரப் பிரிவுகளில் ஒன்று.
நட்சத்திர அதிபதி என்றால் என்ன?
27 நட்சத்திரங்களுக்கும் ஜோதிடத்தில் குறிப்பிட்ட நட்சத்திர அதிபதி வழங்கப்பட்டுள்ளது. கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் ஆகிய ஒன்பது கிரகங்களின் சுழற்சியில் இந்த அதிபதிகள் வருகின்றன.
பாரம்பரிய ஜோதிட முறையில், குழந்தையின் நட்சத்திரம் மற்றும் அதன் பாதத்தை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைப்பதில் சில தொடக்க எழுத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
திருமணப் பொருத்தத்தில் நட்சத்திரத்தின் பங்கு
தமிழ் மற்றும் வேத ஜோதிட மரபுகளில், திருமணப் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரம் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது.
மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ராஜ்ஜு, வேதை உள்ளிட்ட பல்வேறு பொருத்தங்கள் சில ஜோதிட முறைகளில் பரிசீலிக்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இருவருக்கும் இடையிலான பொருத்தத்தை மதிப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது.
குறிப்பு
குறிப்பு: நட்சத்திரம் என்பது ஜோதிட நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். ஒருவரின் குணநலன், எதிர்காலம், திருமணம், பணவரவு அல்லது வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை நட்சத்திரம் மட்டுமே உறுதியாகத் தீர்மானிக்கும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. எனவே, நட்சத்திரம் மற்றும் அது தொடர்பான பலன்களை பாரம்பரிய நம்பிக்கை மற்றும் ஜோதிடக் கணித முறையின் அடிப்படையிலான தகவல்களாகவே எடுத்துக்கொள்வது பொருத்தமானது.

