- Home
- விவசாயம்
- ஒரே நாளில் எக்கசக்கமாக உயர்ந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? அலறி துடிக்கும் இல்லத்தரசிகள்
ஒரே நாளில் எக்கசக்கமாக உயர்ந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? அலறி துடிக்கும் இல்லத்தரசிகள்
கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி பெட்டி ரூ.700க்கும், சில்லரையில் கிலோ ரூ.90 முதல் ரூ.100க்கும் விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உயரும் தக்காளி விலை
தக்காளி விலையானது தங்கத்திற்கு நிகராக தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் என்றாலே தக்காளியின் தேவை மிகவும் அதிகமாகவும், ரசம், சாம்பார், தொக்கு, பிரியாணி என அனைத்திலும் தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது.
எனவே பொதுமக்கள் எந்த காய்கறிகளை வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்குவார்கள். ஆனால் இதன் விலைதான் ஒரு நாள் அதள பாதாளத்திற்கு செல்லும் மற்றொரு நாள் யாரும் எதிர்பாரா உச்சத்தை தொடும்.
ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை
அப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தாண்டியது. வெங்காயத்தின் விலையும் 130 ரூபாயை தொட்டது. இதனால் இந்த இரண்டு காய்கறிகளையும் வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் தவித்த நிலையில் தான் விளைச்சல் அதிகரித்த காரணத்தால் காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்தது.
இதனையடுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையும் சரிந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் தற்போது மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தக்காளி விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சிறிது சிறிதாக அதிகரித்த விலை தற்போது 70 முதல் 80 ரூபாயை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு தக்காளி பெட்டி 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இல்லத்தரசிகள் குறைவான அளவை தக்காளியை வாங்கி வருகிறார்கள். விலை உயர்வு தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தக்காளி விலை உயர்வு காரணம் என்ன.?
மேலும் மழையின் காரணமாக போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் மழையின் பாதிப்பை பொறுத்து தக்காளி விலை இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,
பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது