அந்த பதிவு; ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் அன்புத் தோழன் சீனு ராமசாமியின் எழுத்து - இயக்கத்தில் நேற்று (22-2-2019) வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் ஓப்பனிங் ஷோ பார்க்க (நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு!), மதுரை - திருநகர் மணி இம்பாலாவுக்கு சென்றபோது, குன்றத்தின் ஒரு பெரும்படை அங்கிருந்தது. இப்படத்தின் துணை இயக்குநர் தம்பி ஆதன் மணி, இயக்குநரின் நேர்முக உதவியாளர் ஜாகிர் உசேன், கவிஞர்கள் - ஆத்மார்த்தி, சென்றாயன், இரா.ஜீவா, கோபால் மற்றும் அதீதன் சுரேன் உள்ளிட்ட பலருடன் ஒன்றாக படம் பார்க்கும் வாய்ப்பு கூடியது.
*
சீனுவின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் நிகழும் முக்கியமான திரைப்படங்கள்தான்.

இப்படக் கதைக்களத்தின் மையம் 'விவசாயம் மற்றும் வங்கிக்கடன்'. அதனூடேதான் கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கை, சமூகப் பொறுப்புமிக்க கமலக்கண்ணன் - பாரதி என்ற இரு கதாபாத்திரங்களின் உணர்சிமயமான குடும்பம், காதல் வாழ்க்கை என பயணிக்கறது கதை.

இட்டுக்கட்டியதாகவோ வம்படியாகவோ அல்லாமல் கதையின் போக்கிலேயே இயல்பான - கூர்மையான உரையாடல்கள் இப்படத்தின் ஒரு பலம் என்றால்... கதைக்குப் பொருத்தமான கவிஞர் வைரமுத்துவின் பாடல்களும், மனதை வருடும் யுவன்சங்கர்ராஜாவின் இசையும் மற்றொரு பலம்.

வேளாண் படிப்பு முடித்துவிட்டு, சொந்த கிராமத்தில் - சொந்த நிலத்தில் குடும்பத்துடன் விவசாயம் செய்து கொண்டே, இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் மற்றும் இயற்கை உரம் அதன் தேவைகள், நன்மைகள் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞன் கமலக்கண்ணன்...

வெளியூரில் இருந்து வந்து, அங்குள்ள கிராம வங்கியின் மேலாளராக பொறுப்பேற்று, வங்கியின் விதிகளை கராறாக கடைபிடிக்கத் துடிக்கும் நேர்மையான, மனிதநேயமிக்க அதிகாரி பாரதி...

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் வங்கிகடன் தொடர்பான பிரச்சனைகள்...அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கிடையில் கள அனுபவரீதியான புரிதல்கள்...
அதனால் உருவாகும் காதல்...
இருவீட்டின் சம்மதத்துடன் திருமணம்...
ஆனாலும், கமலக்கண்ணனின் அப்பத்தாவால் குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்சனை...
அதையொட்டி அப்பா ராமசாமி, திருமணம் முடிந்த மறுநாளே அவர்கள் இருவருக்கும் செய்யும் தனிக்குடித்தன ஏற்பாடு... கமலக்கண்ணன் - பாரதியின் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வில் நிகழும் எதிர்பாராத சோகம்...- என ஒரு தெளிந்த நீரோடை போல் செல்கிறது படம்

ஆதரவற்ற பேற்றோர் இல்லத்திற்கு சாட்சி கையெழுத்துப் போட அழைக்கப்பட்ட இருவரில் தன்னுடன், நிறைய லோன் வாங்கி கட்டாமல் ஏமாற்றியதாக தன்னால் எச்சரிக்கப்பட்ட கமலக்கண்ணனும் ஒருவன் என்பதை அறிந்த பாரதிக்கு, ஊரில் அவனுக்கு இருக்கும் மரியாதை தெரிய வருகிறது...
வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும்போது விவசாயம், இயற்கை உரம் (மன்புழு வளர்ப்பு) குறித்த அவனது பேட்டி அவன் மீதான கவனத்தை குவிக்கிறது...


நிலம், சொத்து சுகத்துடன் வசதியாக இருக்கும் ஒருவனுக்கு எதுக்கு எட்டு மாட்டு லோன்கள் என்ற சந்தேகம் வர, கள ஆய்வுக்குச் செல்லும்போது கிராமத்தின் எளிய - ஆதரவற்ற மக்கள் பலருக்கும் தன் சொந்தப் பெயரில் கமலக்கண்ணன் மாட்டு லோன் வாங்கித் தந்ததின் பின்னணியில் அந்த மக்களின் துயர்மிகு வாழ்க்கை தெரிய வரும்போது அதே சிந்தனையுடைய பாரதிக்கு இயல்பாகவே அவன் மீது காதல் பற்றுவதற்கான காரணம் போதுமானதாக இருக்கிறது.

அதேபோல், திருமணத்திற்குக் கூட விடுமுறை எடுக்கக் கூடாதென விடுமுறை நாளில் திருமணத்தை வைக்கலாம் என்று பாரதி சொல்வதும், திருமணம் முடிந்த மறுநாளே வெகு இயல்பாக வழக்கம் போல் வேலைக்குச் செல்வதும், சொந்த வேலைக்கு வங்கி வாகனத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதியும் பல்வேறு செய்திகளை சொல்கின்றன. குறிப்பாக 'முகூர்த்த நாள்' என்ற மந்தைத்தனத்தையும், சேவைத் துறையில் பணியாற்றுபவர்களின் பொறுப்பற்றத்தனத்தையும், உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அதிகார துஷ்பிரயோகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது.

காமம், வன்முறை, மலிவான ரசனைகளை 'டெமோ' செய்து காட்டுவதுதான் கலை என்று ஆகப் பெரும்பாலான திரைப்படங்கள் கட்டமைக்கும் சூழலில்... காதலையும் காமத்தையும் அழகியலோடும் -கவித்துவத்தோடும் உணரச் செய்கிறார் சீனு. குறிப்பாக முதலிரவு காட்சியும், மறுநாள் நிகழும் இருவருக்குமான காம உணர்ச்சிகளையும் கலை நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்...

முதலிரவு அறைக்குள் நுழையும் கமலக்கண்ணன் கட்டிலைப் பார்க்கிறான். அங்கே பாரதி அசதியுடன் தூங்கிக் கொண்டிருக்கிறாள். உடனே அவன், அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக சென்று அருகில் படுத்துக் கொள்கிறான்.

மறுநாள் காலையில் எப்போதும் போல் பாரதி வேலைக்குப் புறப்பட்டு போய்விடுகிறாள். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு அவள் வருவதற்குள் தனிக்குடித்தனம் ஏற்பாடாகி, அவள் பிறந்த வீட்டு சீர்வரிசை அங்கு இறக்கப்பட்டு, அவளுக்கு தகவல் சொல்லப்பட்டு நேரடியாக புது வீட்டிற்குச் செல்லும் சூழல் உருவாகிவிட்டது.

வீட்டிற்குள் நுழைந்தவள் மிக சாதாரணமாக அவனிடம்,
"ஸாரி, நேத்து அசந்து தூங்கிட்டேன். எனக்கு எங்க வீட்ல ஒத்தாசைக்கு ஆள் இல்லாம கல்யாண வேலைகளை நானே செஞ்சதால் கடுமையான அசதி அதான்" என்கிறாள்.
அவன் மெலிதாக புன்னகைக்கிறான்.
"ஏன் எதுவும் பேச மாட்டீங்கிறீங்க" என்று அவள் கேட்டவுடன், சட்டென அவன் "ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?" என்பான். இப்போது அவள் புன்னகைப்பாள். அவன் சொல்லிவிட்டு, கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து, அவள் அவனைக் கடந்து குளியலறைக்குச் செல்வதை கண்டு கொள்ளாமல் தன் வேலையைத் தொடர்வான். அவள் குளியலறைக்குச் சென்று உடலை நனைத்து விட்டு, கதவை மெதுவாகத் திறந்து கையை மட்டும் வெளியே நீட்டி அவனை அழைப்பாள். அவன் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து அவளைத் தழுவும்போது, பொழுது விடியும் காட்சி மலரும். இப்படி ஒரு 'முதலிரவு காட்சி' கலையின் உச்சம்.

ஒரு திரைப்படத்தில், கதையின் மையக்கரு எதுவாக இருந்தாலும் அது பயணிக்கிற தடங்களில் குறுக்கிடும் சமகால பிரச்சனைகளை (அது கதைக்கு மிக நெருக்கமாக, தேவையாக இருப்பினும்) கவனமாக தவிர்த்துவிட்டு வெற்று சாகசங்களால் ரசிக மனங்களை மயக்குவது ஒருவகை அரசியல்.

ஆனால், சீனுவின் இந்தப் படம் நம்மைச் சுற்றி நிகழும் மிக முக்கியமான சமகால அரசியல் பிரச்சனைகள் சிலவற்றை உரையாடல்கள் மூலமும், காட்சிகள் மூலமும் வெகு இயல்பாகவும் ரசனையுடனும் இடித்துவிட்டுச் செல்வதை கதையின் போக்கிலேயே உணரமுடியும்.

வங்கிக் கடன் வாங்கிய பலரும் அதை ஒழுங்காக கட்டாமல் இருப்பதைக் கண்டு கோபம் கொள்ளும் பாரதி, "ஏன் நீங்கள் இதை வசூல் செய்யவில்லை" என்று தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஊழியர்களிடம் கேட்க...

அந்த வங்கியில் மேளாளராக ஆகும் வாய்ப்பு நழுவிப் போன மாத்ருபூதம் (ஷாஜி)
"மேடம், இது நகரம் அல்ல, இங்குள்ளவர்கள் மூர்க்கமானவர்கள். இவர்களிடம் அதிரடியாக வசூல் செய்ய முடியாது" என்று சொல்ல...

அதற்கு பாரதி "நேர்மையான மனிதர்களிடம் மூர்க்கமும், கோபமும் இயல்பாகவே இருக்கத்தான் செய்யும். நான் ஏழை மக்களைப் பற்றி, கட்டுவதற்கு வழியே இல்லாதவர்களைப் பற்றி கேட்கவில்லை" என்று நிதானமாக சொல்வதும்...

இன்னொரு இடத்தில், பாரதிக்கும் மாத்ருபூதத்துக்கும் நடக்கும் உரையாடலில், "மேடம், சாதாரண மாட்டு லோனுக்குப் போயி இவ்வளவு கெடுபிடி பண்றீங்க" என்று மாத்ருபூதம் சொல்ல...

"ஒரே ஆள் எட்டு மாட்டு லோன் வாங்கி கட்டாம வங்கியை ஏமாற்றுகிறார். நீங்க மாடுன்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க? மாட்டுத்தீவன ஊழல்தான் பெரியஊழல். இந்த நாட்டுல மாட்டாலதான் பெரிய பிரச்சன." என்று, போகிற போக்கில் சொல்வது மிக நுட்பமான அரசியல்.

உதயநிதியின் சகாக்களாக வருபவர்களின் நக்கல், நையாண்டிகள் பலவும் பொதுத்தளத்தில் வெகுவாக விமர்சிக்கப்படும் உரையாடல்கள்தான்...

"ஆமா, ஒரு லட்சம் ரெண்டு லட்சம் வாங்குனவன வெரட்டுங்க, 10 ஆயிரம் கோடி கடன் வாங்குனவன விட்ருங்க".

"டேய், முதியோர் இல்லம்னா என்னடா?"
"ம்ம்ம்... ஒன்னய மாதிரி புள்ளைய பெத்தவங்க தங்குற இடம்".

"டேய் 'நீட்'டுன்னா என்னடா?"
"ஏன்டா, தூங்குறவன எழுப்பி நீட்டு மடக்குன்னுக்கிட்டு"...
இது, இதற்கு முன், அதே காரில் கல்விக் கடனுக்கு சிபாரிசு கையெழுத்து போடப் போகும் கமலக்கண்ணனுக்கும், மருத்துவம் படிக்கப் போகும் எளிய கிராமத்து மாணவி வெண்மணிக்கும் இடையில் நடக்கும் நீட் தேர்வு குறித்த உரையாடலின் தொடர்ச்சி...

"மார்க்கு என்னம்மா"
"1192ண்ணே"
"நல்ல மார்க்குதான். நீட் பயிற்சி வகுப்புக்கு போனியா?"
"ஆமாண்ணே டாக்டர் படிப்புக்கு ரெண்டு பரீட்சை! சொல்லித் தராத பாடத்த நீட் தேர்வுல கேள்வியா கேட்டா எப்டிண்ணே எழுத முடியும்?
ரொம்ப கஷ்டப்பட்டு பாஸானேன்." என்பதும்...

கடனைக் கேட்டுவரும் வங்கி அதிகாரிகளுக்குப் பயந்து ஓடிப்போய் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற விவசாயி ஒருவர் "எல்லா பொருளுக்கும் உற்பத்தி செய்றவனே விலையத் தீர்மானிக்கிறான், ஆனா, நாங்க விளைய வச்சதுக்கு எவனோ விலைய தீர்மானிக்கிறான். விளைய வைக்கிறவனுக்கும் இல்லாம, வாங்கி சாப்பிடறவனுக்கும் இல்லாம, இடையில உள்ளவன் கொழுத்த லாபம் பாக்குறான். அப்புறம் எப்படிய்யா நாங்க நிம்மதியா வாழுறது?" என்பதும்...

பெண் பார்க்கப் போனபோது,
மொட்டை மாடியில் கமலக்கண்ணனிடம் பாரதி...
"இந்நேரம் கீழ உங்க அப்பத்தா எங்கம்மாட்ட என்ன கேட்டுட்டு இருப்பாங்கன்னு சொல்லுங்க"...
"என்ன?"
"எங்க ஜாதி என்னன்னு கேட்டுட்டு இருப்பாங்க." என்பதும் முகத்தில் அறையும் உண்மைகள்.

நேர்மையும் மனிதநேயமுமிக்க வங்கி அதிகாரி பாரதியாக தமன்னாவும்...
சமூக பொறுப்புமிக்க இளைஞன் கமலக்கண்ணனாக உதயநிதி ஸ்டாலினும்...
நேர்மையாக இருப்பதாலேயே ஊர் ஊருக்கு துரத்தியடிக்கப்படும் வங்கி அதிகாரியான பாரதியை தன் பேரன் திருமணம் செய்தால், அவனைப் பிரிய வேண்டுமே என்ற கவலையை பாரதியின் மீது வெறுப்பாக மாற்றுவதும், இறுதியில் பாரதியின் துயரமான நிலைகண்டு துடித்துப் போய் உரிமை கலந்த அன்பைக் கொட்டுவதுமான ஒரு அசலான கிராமத்து கிழவியாக வடிவுக்கரசி யும்...
சிறு வயதிலேயே தாயை இழந்த தன் மகனுக்குத் தாயாய் இருக்கும் தன் தாயின் பேச்சைத் தட்ட முடியாத தந்தையாகவும், அதே நேரத்தில் தன் மருமகள் மனம் புண்படும்படி தன் தாய் நடந்து கொள்வாளே என்று பதற்றமடைந்து திருமணம் முடிந்த மறுநாளே தனிக்குடித்தனம் அனுப்பும் மாமனார் ராமசாமியாக 'பூ' ராமுவும்... .


கமலக்கண்ணனின் பள்ளித் தோழியாகவும், உள்ளூர் கந்துவட்டிக்காரனிடம் அவன் அடிபட்டு, அவமானப்பட்டு நிற்கும்போது, கொதித்தெழுந்து கந்துவட்டிக்காரனை கிராமத்துப் பெண்களுக்கேயுரிய அசாத்திய துணிச்சலுடன் வருத்தெடுக்கும் முத்துலெட்சுமியாக வசுந்த்ராவும் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்!

இப்படத்தின் இருவேறு காட்சிகளில் கவிஞர்கள் சோழ.நாகராஜனும், ஆத்மார்த்தியும் அதே பெயரிலேயே நடித்திருக்கிறார்கள். கமலக்கண்ணன் என்ற சமூகப் பொறுப்புமிக்க கதாபாத்திரத்தின் அடர்த்தியை கூட்டுவதற்கான அந்த இரு காட்சிகளும் இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல் அமைந்திருக்கிறது.

'கண்ணே கலைமானே' - சீனு ராமசாமியின் மற்றுமொரு முத்திரைப்படம்!  இப்படி படிப்பவர்களை பார்க்கத்தூண்டும் விதமாக பதிவிட்டிருக்கிறார்.