போலீஸ் எனக் கூறி ரகசியமாக ஆண் நண்பர்களுடன் தனிமையில் சந்திக்கும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்த நபர் வசமாக சிக்கியுள்ளார். 

சென்னை, மணலியை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஹேண்ட் பேக்கில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் முன்னுக்குப்பின் பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பெண்ணிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணமான அப்பெண் தனது ஆண் நண்பருடன் ரகசியமாக மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த நபர் தன்னை போலீஸ் எனக்கூறி இருவரையும் செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோவை பெண்ணின் கணவரிடம் காட்டப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால், என்ன செய்வது என தெரியாமல் அப்பெண் திகைத்துள்ளார். உடனே அந்த பெண்ணின் ஆண் நண்பரை அங்கிருந்து விரட்டிய அவர், அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும், செல்போனையும் பறித்து சென்றுள்ளார்.

இதனை அடுத்து அப்பெண்ண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் பறிக்கப்பட்ட செல்போன் சிக்னலின் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் போலீஸ் சீருடையில் வந்த நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவர்தான் போலீஸ் போல் உடையணிந்து மணலி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது பெயர் டிக்கி மணி என்ற பிச்சை மணி என்பதும் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் 5 டேங்கர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

போலீஸ் போல தோற்றம் இருந்ததால், பல இடங்களில் தன்னை போலீஸ் என்றே அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து மாதவரம், புழல் பகுதிகளில் உள்ள ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமையில் சந்திக்கும் ஜோடிகள் மற்றும் காதலர்களை தான் போலீஸ் என மிரட்டி, பெண்களுடன் வரும் ஆண்களை விரட்டிவிட்டு அப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 5 ஆண்டுகளாக 50 மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசாரிடம் டிக்கி மணி ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விஷயம் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவும், அவமானம் கருதியும் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.