பொன்னேரி அருகே நடைபெறும் தொடர் வழிப்பறி, மற்றும் கொள்ளை சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து அரசு பேருந்து சிறை பிடித்து  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நடைபெற்று வரும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்க தவறிய போலீசை கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரெட்டிப்பாளையம், மனோபுரம், காட்டூர், ஆலாடு  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் போலீசார் கொள்ளையர்களை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரிய மனோபுரம் கிராமத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பணி முடித்து செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி கொள்ளையர்கள் அச்சுறுத்தி வருவதாகவும், அச்சத்தோடு இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் காட்டூர் காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்த கொள்ளையர்கள் 3பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அலட்சியம் செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து கொள்ளை சம்பவங்களை தடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.