Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வாசலில் புல்டோசர்... 48 மணி நேரம் கெடு... குற்றவாளிகளை தட்டித் தூக்கிய போலீஸ்...!

பல்வேறு அதிரடிகளை கையாண்டதை அடுத்து அம்மாநில எதிர்கட்சிகளால் "புல்டோசர் பாபா" என யோகி ஆதித்யநாத் அழைக்கப்பட்டார்.

UP bulldozers arrive at doorstep to force crime accused to surrender
Author
India, First Published Apr 2, 2022, 11:32 AM IST

ஏழு கட்டங்களாக நடைபெற்ற உத்திர பிரதேச மாநில தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது, பிப்ரவரி 18 ஆம் தேதி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, "புல்டோசர்களை சரி செய்ய அனுப்பி இருக்கிறேன். மார்ச் 10 ஆம் தேதிக்கு பின் அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் போது, தற்போது ஆக்ரோஷமாக இருக்கும் அனைவரும் அமைதியாகி விடுவர்," என தெரிவித்தார். 

தற்போது தேர்தல் நிறைவுற்று, யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியேற்று இருப்பதை அடுத்து, புல்டோசர்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்வர் பதவியின் முதல் ஐந்து ஆண்டுகளில் காவல் துறையை வைத்து பல்வேறு அதிரடிகளை கையாண்டதை அடுத்து, எதிர்கட்சிகளால் "புல்டோசர் பாபா" என யோகி ஆதித்யநாத் அழைக்கப்பட்டார். 

புல்டோசர் ஆக்‌ஷன்:

உத்திர பிரதேச மாநிலத்தை இரண்டாவது முறையாக ஆள துவங்கி இருக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர்களை கொண்டு இரு தரமான சம்பவங்களை அரங்கேற்றி விட்டார். இரு சம்பவங்களும் கற்பழிப்பு தொடர்பானவை ஆகும். குற்றம்சாட்டப்பட்டவர்களை சரணடைய வற்புறுத்தி புல்டோசர் ஆக்‌ஷன் எடுக்கப்பட்டு இருக்கிறது. 

கடந்த மார்ச் 25 ஆம் தேதி இருவரும் சேர்ந்து மைனர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து உத்திர பிரதேச மாநிலத்தின் ஷாரன்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் குற்றம்சாட்டப்பட்ட ஆமிர் (19) மற்றும் ஆசிஃப் (22) ஆகியோரை சரணடைய வற்புறுத்தி கடந்த வியாழக் கிழமை மதிய வேளையில் அவர்களின் வீட்டு வாசலில் புல்டோசர்களுடன் வந்தனர். 

மிரட்டல்:

மேலும் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் அடுத்த 48 மணி நேரத்தில் சரணடையவில்லை எனில், வீட்டை இடித்து விடுவதாக காவல் துறை சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் போலீசார் கண்காணிப்பில் வீட்டின் முதல் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. குற்றவாளிகளுக்கு உதவி செய்து வருபவர்களுக்கும் போலீசார் மிரட்டினர். இதோடு புகார் அளித்தவரை மிரட்டியதாக இரு சகோதரர்களின் தந்தை ஷராஃபத் (56) மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது. 

"செல்வாக்கு மிக்க குடும்பத்தை சார்ந்த குற்றவாளிகளுக்கு ஒன்றை கூற விரும்புகிறோம், தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டின் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டு விட்டது. எங்கள் நடவடிக்கையின் தாக்கம் தரையில் தெளிவாக தெரிகிறது. இந்த இடத்தை விட்டு வெளியேறும் முன், குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். குற்றவாளிகள் சரண் அடையும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என உள்ளூர் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

செல்வாக்கு மிக்க குடும்பம்:

"எங்களுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை. போலீசார் எங்கள் மீது அழுத்தம் கொடுப்பதோடு, சரண் அடையவில்லை எனில், எங்கள் வீட்டை இடித்து விடுவதாகும் மிரட்டி வருகின்றனர்," என குற்றவாளியின் தந்தை தெரிவித்தார்.  

"மைனர் சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது எடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். குற்றவாளிகள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனர்," என கூடுதல் காவல் துறை ஆணையர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். 

கைது:

நீண்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற வழக்குகளில் புல்டோசர் பயன்படுத்துவது பற்றி ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதா என்ற கேள்விக்கு போலீசார் பதில் அளிக்கவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios