கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டத்தை அடுத்து இருக்கிறது களியல். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வயது 70 . இவரது வீட்டின் அருகே ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பானு என்கிற மகள் இருக்கிறார். பானு அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

பக்கத்து வீடு என்பதால் ராஜேந்திரன் அந்த தம்பதியினர் உடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் சிறுமி பானுவை அடிக்கடி அவர் அழைத்து பேசுவார் என்று தெரிகிறது. பானுவும் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சம்பவத்தன்றும் ராஜேந்திரன் வீட்டிற்கு பானு சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அழுது கொண்டே சிறுமி பானு வெளியே வந்தார். அவர் அழுவதை பார்த்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அவர்களிடம் பானு நடந்தவற்றை கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ராஜேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இதை தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில்  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கைதான ராஜேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.