ஆசை வார்த்தைகளை நம்பி எப்படியாவது கால் பாய் வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என பலமுறை கட்டணங்களை செலுத்தி இருக்கிறார்.
தட்டாவாடி காவல் துறையினர் 27 வயது இளைஞரை ஏமாற்றி 17 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை பறித்த கயவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கால் பாய் வேலை வாங்கி தருவதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ரூ. 3 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்து இருக்கிறார்.
கால் பாய் வேலை:
எப்படியாவது கால் பாய் வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசையில், தனது தந்தை சேமிப்பில் இருந்த தொகை மற்றும் பிக்சட் டெபாசிட் தொகை உள்ளிட்டவைகளை இந்த இளைஞர் எடுத்து கொடுத்துள்ளார். இவரது தந்தை கொரோனா ஊரடங்கின் போது உயிரிழந்து விட்டார். குடும்பத்தாரிடம் இந்த தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக இளைஞர் கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 24 ஆம் தேதி வரை இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட இளைஞர் ஃபேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தில் மயங்கி இந்த கும்பலை தொடர்பு கொண்டிருக்கிறார். பின் அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, எப்படியாவது வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என பலமுறை கட்டணங்களை செலுத்தி இருக்கிறார்.
கட்டணம்:
உரிமத்துக்கான கட்டணம், ரூம் வாடகை, பிக்கப் மற்றும் டிராப் வசதி மற்றும் தாமதத்திற்கான கட்டணம் என பல முறை இந்த இளைஞர் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்திக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட இளைஞர் அதன்பின் காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். பின் சிவாஜிநகர் காவல் துறையின் சைபர் குற்ற பிரிவில் புகார் அளித்தார்.
விசாரணை:
"பாதிக்கப்பட்ட நபர் பிளே பாய் வேலையில் சேர ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஒன்றை சமூக வலைதளத்தில் பார்த்துள்ளார். அந்த பதிவில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த இளைஞருக்கு அலுவலர் என கூறி பலர் தொடர்ந்து அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பல்வேறு காரணங்களை கூறி கட்டணம் செலுத்த நபரிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். மொபைல் நம்பர், வங்கி அக்கவுண்ட் விவரங்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணையை துவங்கி இருக்கிறோம்," என தட்டாவாடி காவல் துறை அதிகாரி ஷங்கர் காட்கே தெரிவித்து இருக்கிறார்.
