புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் இந்த மோதல் போக்கை எப்படி கையாளப்போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.  இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த இணையதளத்தை முடக்கியது இந்தியாவே என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், ’’பாகிஸ்தானில் இருந்து இந்த இணையதளம் எந்த பிரச்னையும் இன்றி இயங்கி வருகிறது.

ஆனால், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து வருபவர்கள், தங்களால் இணையதளத்தை பார்க்க முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய ஹேக்கர்கள் இதனை செய்திருக்கலாம். இது இந்தியாவின் சைபர் தாக்குதல்’’ என்று முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார்.