10 ஆண்டுகளுக்கு முன் நர்ஸ் மாயமான வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நர்ஸ் சுதாவை கொன்று, புதருக்குள் வீசிய பின் அவர் உயிருடன் இருக்கலாம் எனக் கருதி முகத்தில் பாறாங்கல்லை போட்டு சிதைத்ததாகவும் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியை சேர்ந்த சண்முகம் மகள் சுதா. இவர் கண்ணனூர் அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2007ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவருடன் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் அப்போது சுதாவை அவரது உறவுக்காரரான சகோதரர் இளைஞரான செல்லிப்பாளையத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் தனது டூவீலரில் அழைத்துச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2009 நவம்பர் 29ஆம் நைட் டியூட்டிக்கு செல்வதாக புறப்பட்ட சுதா மருத்துவமனைக்கு போய் சேரவில்லை. மறுநாள் அவர் வீட்டிற்கும் வராமல் இருக்கவே உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் 2 நாட்களுக்குப் பிறகு துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகாரை போலீசார் கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் சுதாவின் கணவர் ராஜ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அதன்பிறகு அவர் கல்யாணம்  செய்து கொண்டதால் இந்த வழக்கில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டாததால்,  2014ஆம் ஆண்டில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்த தந்தை சண்முகம், தமது மகள் மாயமான வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்தின் அழுத்தத்தை அடுத்து மத்திய மண்டல ஐஜி, டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

நர்ஸ் சுதாவை வழக்கமாக டூவீலரில் இறக்கி விடும் யோகேஸ்வரனைப் பிடித்து தீர விசாரிக்கையில், 10 ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்த வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. சுதாவை நகைக்காக கொலை செய்து விட்டதாக யோகேஸ்வரன் வாக்கு மூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

தமது காதலி கர்ப்பமானதாகவும் அதைக் கலைக்க சுதாவிடம் பணம் மற்றும் நகையைக் கேட்டதாகவும், அவற்றைத் தராத காரணத்தால் காரில் கடத்திச் சென்று சுதாவைக் கொலை செய்து விட்டதாகவும் யோகேஸ்வரன் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைத் திட்டத்தில் சுதாவின் தாய்மாமன் உறவுக்காரரான ரங்கராஜையும் சேர்த்துக் கொண்டதாக கூறவே அவரையும் போலீசார் கைது செய்தனர். சுதாவைக் காரில் ஏற்றிச் சென்று கொத்தம்பட்டி பாலம் அருகே கொண்டு சென்றதாகவும் அங்கு வைத்து துப்பட்டாவால் சுதாவின் கழுத்தை சுற்றி நெரித்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

பின்னர் சுதாவின் 9 சவரன் நகைகளை கழற்றியதாகவும், காது மற்றும் மூக்கில் இருந்த அணிகலன்களை கழற்ற முடியாமல், பிளேடால் அறுத்ததாகவும் திடுக்கிடும் தகவல்களையும் அவர்கள் கூறியதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சுதாவின் உடலை நாமக்கல் அருகே தத்தாத்திரிபுரம் புதருக்குள் வீசியதாகவும், அவர் உயிருடன் இருக்கலாம் எனக் கருதி பாறாங்கல்லை போட்டு முகத்தை சில்லு சில்லாக சிதைத்ததாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த கொலையில் தாம் சிக்காமல் இருக்க  பாறாங்கல்லில் கைரேகை இருக்கும் என்று பயந்த அவர்கள் அதை காரில் எடுத்துச் சென்று கழுவி ரங்கராஜ் வீட்டருகே வைத்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.