சேலம் மாவட்டம் மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(29). இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதியினருக்கு மகாநிஷா என்கிற 6 வயது மகள் இருக்கிறாள். கோபால கிருஷ்ணன் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாநிஷாவிற்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. இதனால் அவரது பெற்றோர் புள்ளிபாளையத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் தனசேகரன் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கி இருக்கிறார்.

வீட்டிற்கு வந்ததும் மாத்திரையை பாதியாக உடைத்து மகளுக்கு தனசேகரன் கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது உடைக்கப்பட்ட ஒரு மாத்திரையில் கம்பி இருந்திருக்கிறது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அடைந்த அவர் தனது கிராம மக்களிடம் தெரிவித்திருக்கிறார்.

உடனே அந்த ஊரைச் சேர்ந்த 20 பேர் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஊர்மக்கள் காவலர்களிடம், அஜாக்கிரதையாக செயல்பட்ட மருந்து நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மீது சேலம் மாவட்ட சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்திரையில் கம்பி இருந்தது தெரியாமல் குழந்தைக்கு கொடுத்திருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்பதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே போல சில நாட்களுக்கு முன்னர் கோவையில் ஒரு மருந்து கடையில் வாங்கிய மாத்திரையில் கம்பி இருந்ததாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.