கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தில் விருத்தாசலம்-சேலம் ரெயில்வே தண்டவாளத்தில் சுமார்  35 வயதுடைய ஆண், 25 வயதுடைய பெண் ஒருவரும் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் தண்டவாளத்தின் அருகில் மோட்டார் சைக்கிள், விஷ பாட்டில் மற்றும் செருப்புகள் கிடந்தன. 

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்  மற்றும் பெண்ணாடம் பொன்னேரியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி காயத்ரி என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான ரமேசுக்கு, லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அதேபோல் காயத்ரிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

ரமேசும், காயத்ரியும் விருத்தாசலத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது  கள்ளக்காதலுக்கு இரு தரப்புனரும் கடும் எதிர்ப்பித் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் ரமேசும், காயத்ரியும் திடீரென மாயமாகினர். இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தான் கள்ளக்காதலர்கள் 2 பேரும் தொட்டிக்குப்பம் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்காதலுக்கு வந்த எதிர்ப்பின் காரணமாக, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதற்கு மனமின்றி, அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் விஷம் குடித்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.