மதுரை கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்தவர்  கார்த்திகேயன்.  பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் அதிபரின் மகள் பாரதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாகவும், எனவே இவர்களுடன் இருவீட்டாரும் பேசுவது இல்லை என்றும் கூறப்படுகிறது.

கார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் எஸ்.எஸ்.காலனி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுடைய மகன் சபா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அவனை கார்த்திகேயனும், பாரதியும் கவனமாக வளர்த்து வந்தனர். மகனை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான பள்ளியில் சேர்த்திருந்தனர்.

இதற்கிடையே பாரதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரது கை, கால் செயல் இழந்து படுத்த படுக்கை ஆனார். அவரை குணப்படுத்த கார்த்திகேயன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும், ஆனாலும் நோய் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மனநிலை பாதிக்கப்பட்ட மகனையும், நோயாளியான மனைவியையும் கவனிக்கும் பொறுப்பு கார்த்திகேயனிடம் வந்தது.

இந்த நிலையில் அவர்கள் குடியிருந்த அபார்ட்மெண்ட்டின் காவலாளி ஆசைத்தம்பி, குடியிருப்பு பாராமரிப்பு கட்டணம் வசூலிக்க நேற்று கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றார். வெகு நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை. எனவே மாலையில் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டிய போது கதவு திறந்தது.

உள்ளே சென்று பார்த்த போது. கார்த்திகேயன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இது குறித்து  எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, கார்த்திகேயன் பிணமாக தொங்கிய அறையில் பாரதியும், மகன் சபாவும் பிணமாக கிடந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், . அந்த வீட்டில் இருந்து ஒரு நோட்டை கைப்பற்றினார்கள். அதில் 15 பக்கம் அளவில், கார்த்திகேயன் எழுதிய கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில் தனது மனைவி அதிகாலை 3 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். மனைவி இல்லாத வாழ்க்கையை இனி வாழ பிடிக்கவில்லை. மேலும் எனது மகனும் மாற்றுத்திறனாளி என்பதால் அவனை கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனவே மகனும் நானும் சாகப்போகிறோம் என்று எழுதி இருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.