சரியாகப் பராமரிக்கப்படாத கவர்மெண்ட் பஸ்களைப் பார்த்து ‘இதைக் காயலான் கடையிலதான்பா போடணும்’ என்று எவ்வளவு நாளைக்குத்தான் வாயாலேயே சொல்லிக்கொண்டிருப்பது? இதோ அதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் ஹைதராபாத் சகோதர்கள் இருவர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் இரவு பனிரெண்டு மணிக்கு பார்க் பண்ணிய டிரைவர் அதிகாலை மீண்டும் 5 மணிக்கு வந்து பார்த்தபோது கிணத்தக் காணோம் வடிவேலு மாதிரியே பதறிப்போய்விட்டார். காரணம் அவர் நிறுத்தியிருந்த பஸ்ஸைக் காணோம்.

பதறியடித்த  டிரைவர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த சிசிடிவி காட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாந்தேடு பகுதியை நோக்கி பேருந்தை திருடியவர்கள் பேருந்தை ஓட்டி சென்றுள்ளது அதில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து நாந்தேடு போலீசாரின் உதவியுடன் ஹைதராபாத் போலீசார் நடத்திய விசாரனைனையில், நாந்தேடில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பொக்கர் எனும் ஊரில் உள்ள காயலான் கடையில் பேருந்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது பஸ்சின் எலும்புக்கூடு போன்ற ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது.
 
இதனையடுத்து, பேருந்தை திருடி ஓட்டிச் சென்ற ஹைதாராபாத்தை சேர்ந்த சகோதரர்களான சையது அபேத், சையது ஜிகாத் ஆகியோரையும்,பொக்காரில் காயலான் கடை நடத்தும் அவர்களது உறவினர்களான முகமது நவீத், அப்சல் கனி மற்றும் காயலான் கடை ஊழியர்கள் நான்கு பேர் உட்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.