வீடு புகுந்து சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

ஆவடி, கோவர்தனகிரி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (25), இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பயணியாற்றி வருகிறார். இவருக்கு கலைசெல்வி என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். பாலசந்திரன் வீட்டின் எதிரில் பெண் ஒருவர் இரண்டு மகள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். அவருக்கு கணவர் இல்லை. இதைப் பயன்படுத்தி பாலசந்திரன் அடிக்கடி எதிர் வீட்டுக்கு சென்று நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுமியுடன் பாலசந்திரன் நெருங்கி பழகி வந்துள்ளார். 

இதுபற்றி தெரிந்த சிறுமியின் தாயார் பாலச்சந்திரனை ஒருமுறை கண்டித்துள்ளார். இதையடுத்து, பாலசந்திரன் அவரகள் வீட்டுக்கு சென்று பார்ப்பதை தவிர்த்து விட்டு  வெளியில் தனியாக சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி சிறுமியின் தாயார் சொந்த ஊரான மதுரைக்கு ஓட்டு போடுவதற்காக சென்றுவிட்டார். அப்போது வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட பாலசந்திரன் அவரது வீட்டுக்கு சென்று சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவருக்கு தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பிறகு, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஊருக்கு சென்ற பெண்ணின் தாயார் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பியுள்ளார். 

பின்னர் இரவு சிறுமி தூங்கும்போது அவள் கழுத்தில் தாலி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி விசாரித்தபோது சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து நேற்று ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பாலச்சந்திரனை போலீசார்  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவரை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நீதிமன்றத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.