விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைவீதியில் உள்ள கடையில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் 2000 நோட்டை மாற்றினார்கள். அதில் சந்தேகம் ஏற்பட்டதால், கடைக்காரர் கொடுத்த புகாரின்படி, போலீசார் 2 பேரையும் பிடித்தனர்.

விசாரணையில், விருதுநகர் செவல்பட்டியை சேர்ந்த கோபிநாத், சூர்யா ஆகியோர் என தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 33 ஆயிரத்து 150 ரூபாய்க்கான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் கொடுத்த தகவலின்படி, ராஜபாளையம் எம். புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால், மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த இளங்கோ ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 700 ரூபாய் கள்ள நோட்டுக்கள்ம் மற்றும் கள்ள நோட்டுகளை தயாரிப்பதற்கான மெஷின் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கள்ள நோட்டுக்களை பதுக்கி வைத்து முக்கிய குற்றவாளிகள் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த முருகன், நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த திருவாசகம் ஆகியோரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 34 லட்சத்து 58 ஆயிரத்து 750 ரூபாய் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சூரியா, முருகன், கோபிநாத் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை விருதுநகர் சிறையில் அடைத்தனர்.

மேலும் 3 பேரிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

கலர் பிரின்ட்டிங் மூலம் இந்த நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் யார் யார் உள்னனர் என 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 36 லட்சம் ரூபாய்க்கான கள்ள நோட்டுக்கள் சிக்கியிருப்பது போலீசாரை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.