ஃபேஸ்புக் மூலம் கல்லூரி மாணவன் போல காட்டிக் கொண்டு, கல்லூரி மாணவி ஒருவரை காதல்வலையில் வீழ்த்தி குடும்பம் நடத்திய ஏமாற்றிய லாரி டிரைவரை கட்டி வைத்து அடித்த சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியை சேர்ந்தவர் செல்லதுரை. முக நூலில் தன்னை ஒரு கல்லூரி மாணவன் போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பல பெண்களுடன் பழகி வந்துள்ளார். அப்போது கல்லூரிக்கு ஸ்மார்ட் போனுடன் சென்று வந்த மாணவி ஒருவர் செல்லத்துரையுடன் பழகி உள்ளார். தனது காதல் வலையில் வீழ்ந்த அந்த மாணவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து செல்லத்துரை அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது. திருவண்ணாமலையில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு பார்த்து அந்த மாணவியுடன் குடித்தனம் நடத்திய போது செல்லத்துரை லாரி டிரைவர் என்பது தெரியவந்துள்ளது.

சில மாதங்களாக அவனது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட, அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும் அவர்களை தவிக்க விட்டு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. அதோடில்லாமல் மேலும் சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதையும் அறிந்து அதிர்ந்து போன அந்த மாணவி மீண்டும் தனது வீட்டுக்கே திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் மாணவியை மீண்டும் தன்னிடம் வரவைப்பதற்காக இருவரும் தனிமையில் இருந்த போது எடுத்த ஆபாச வீடியோ மற்றும் புகைபடங்களை மாணவியின் கல்லூரி குழுவில் பரப்பி உள்ளான் செல்லத்துரை. இதனால் அவமானத்துக்குள்ளான மாணவி வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் விரக்தியில் இருந்துள்ளார்.இந்த நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வீட்டில் இருப்பதை அறிந்த செல்லத்துரை தனது மனைவியை தன்னுடன் வந்து வாழச்சொல்லுங்கள் என கூறி, பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்வது போல மிரட்டி உள்ளான். அவர் வர மறுத்ததால் மாணவி மற்றும் பாட்டியின் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

அக்கம் பக்கத்து வீட்டார் செல்லத்துரையை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டிவைத்தனர். அவர்களிடம் குடி போதையில் இருந்த செல்லதுரை தனது மனைவியை அழைத்து செல்ல வந்ததாக உளறினான். நீண்ட நேரத்திற்கு பின்னர் வந்த காவல்துறையினர் அவனை குளிக்க வைத்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை அவரது தாய் காவல் நிலையத்தில் புகாராக தெரிவித்துள்ளார்.