கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் விஷ்ணு(19). ஈச்சனாரியில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு விஷ்ணு சென்று வருவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த  சில நாட்களுக்கு முன்னர் விஷ்ணுவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 15 நாட்களாக கோவையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்திருக்கிறார்.

இன்று வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றிருக்கிறார் விஷ்ணு. காலை முதல் வகுப்பிற்கு ஆசிரியர் வந்து பாடம் நடத்தி இருக்கிறார். அதில் கலந்து கொண்ட விஷ்ணு, வகுப்பு முடிந்து ஆசிரியர் கிளம்பியதும் வகுப்பறையின் வெளியே வந்து நின்றிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடிரென்று மாடியில் இருந்து கீழே குதித்தார்.

அதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது விஷ்ணு ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கிறார். இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததால் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் காவல் துறைக்கும் மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரின் பெற்றோரிடமும், சக மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.