திருப்பூர் நகரம் ஆடை உற்பத்தி தொழிலுக்கு பெயர் போனது. இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது வடமாநிலத்தைச் சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகின்றனர்.

திருப்பூரில் இருக்கும் விஜயா நகர் என்கிற பகுதியில் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 14 வயது நிரம்பிய வடமாநில சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் குடியிருக்கும் வடமாநில இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த சிறுமியை ஏமாற்றி அந்த இளைஞர் பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதில்  அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் அந்த இளைஞர் மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் அவர் தலைமறைவு ஆகி இருக்கிறார். காவல்துறை வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வந்திருக்கின்றனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சிறுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை சிறுமியும் அவரின் பெற்றோரும் நன்றாக பார்த்து வந்திருக்கின்றனர். இதனிடையே நேற்று குழந்தை திடீரென உயிரிழந்திருக்கிறது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் குழந்தை இறந்த தகவலை காவல்துறைக்கு தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இறந்த காரணம் குறித்து வீட்டில் இருப்பவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

14 வயது சிறுமிக்கு பிறந்த 4 மாத ஆண் குழந்தை திடீரென உயிரிழந்திருப்பது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.