யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் மறக்காமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
அரசு குடிமை பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியிட்டது.
இந்த நிலையில், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 6ஆம் தேதி (இன்று) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 5ஆம் தேதி (நேற்று) மாலையுடன் முடிவடைய இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் எனவும், அதற்கு மேல் விண்ணப்பிக்க முடியாது எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் upsconline.nic.in. தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். சுமார் 1056 பணியிடங்களை நிரப்புவதற்கான, இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு மே மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 1105 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியான நிலையில், நடப்பாண்டில் குறைவான காலியடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம், காலியிடங்கள் 2021ஆம் ஆண்டில் 712 ஆகவும், 2020ஆம் ஆண்டில் 796 ஆகவும் இருந்தது.
விண்ணப்பிக்க என்ன தகுதி?
விண்ணப்பதாரர் 21 வயதை அடைந்திருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2024 அன்று 32 வயதை அடைந்திருக்கக்கூடாது. அதாவது, விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 2, 1992 க்கு முன்னதாகவும் ஆகஸ்ட் 1, 2003 க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜோஹோ நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. இன்றே கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க..
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள், முதல்நிலை தேர்வு, முதன்மை மற்றும் ஆளுமைத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. முதல்நிலைத் தேர்வில் அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இருக்கும். அதில், கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். முதன்மைத் தேர்வைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் சுற்று நடைபெறும்.