பிரதமர் மோடி திறந்து வைத்த கர்த்தவ்ய பவன், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே இடத்தில் கொண்டுவருகிறது. நவீன தொழில்நுட்பம், குறைந்த மின்சார நுகர்வு போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே இடத்தில் கொண்டுவந்து நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பொதுவான மத்திய செயலகம் (Common Central Secretariat - CCS) கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டிடமான கர்த்தவ்ய பவனை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்துள்ளார்.
இந்த புதிய கட்டிடத்தில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை, ஊரக வளர்ச்சி, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் (MSME), பெட்ரோலியம் உள்ளிட்ட பல துறைகளின் அமைச்சகங்கள் செயல்பட உள்ளன.
கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக ராய்சினா ஹில்ஸில் உள்ள நார்த் பிளாக்கில் இருந்து செயல்பட்டு வந்த உள்துறை அமைச்சகம், இப்போது இந்தக் புதிய கட்டிடத்திற்கு மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்த்தவ்ய பவன் வளாகத்தின் சிறப்பம்சங்கள்:
குறைந்த மின்சார நுகர்வு: கர்த்தவ்ய பவன், வழக்கமான கட்டிடங்களை விட 30% குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள்: வெப்பத்தைக் குறைத்து, வெளிப்புற இரைச்சலைத் தடுக்கும் கண்ணாடிகள், தேவைப்படாதபோது தானாக அணைந்துவிடும் சென்சார்கள் கொண்ட LED விளக்குகள், மின்சாரத்தை சேமிக்கும் ஸ்மார்ட் லிஃப்ட்கள் மற்றும் மின்சார பயன்பாட்டை நிர்வகிக்கும் நவீன அமைப்புகள் இதில் உள்ளன.
பெரிய பரப்பளவு: இந்த கட்டிடம் சுமார் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், தரைத்தளம் உட்பட ஏழு மாடிகளையும், இரண்டு நிலத்தடி தளங்களையும் கொண்டுள்ளது.
தற்போது பல அமைச்சகங்கள் 1950-70களில் கட்டப்பட்ட சாஸ்திரி பவன், கிரிஷி பவன் போன்ற பழைய கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடங்கள் காலாவதியானவை என அரசு கருதுகிறது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக, மொத்தம் 10 பொதுவான மத்திய செயலக கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜூன் 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
