அரசு நூலக வேலைக்கு விண்ணப்பித்தவர்களா நீங்க... ஹால்டிக்கெட் வெளியானது - பதிவிறக்கம் செய்வது எப்படி?
அரசு ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதற்கான கணினி வழி தேர்வு வருகிற மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.அதற்கான ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளதாகவும், அதனை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது பற்றியும் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது : “நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித்தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.