சிலிக்கான் வேலி வங்கி திவால்; ஒரே நேரத்தில் 42 பில்லியன் டாலர் பணம் திரும்பப் பெற்றதால் பதற்றம்!!
அமெரிக்காவில் பெரிய அளவில் கடன் வழங்கி வந்த சிலிக்கான் வேலி வங்கி திடீரென 48 மணி நேரத்தில் திவாலானது. இந்த வங்கி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் துவங்கப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிதி நெருக்கடியால் மூடப்பட்ட இரண்டாவது வங்கியாக இந்த வங்கி இருக்கிறது.
இந்த வங்கியானது பெரும்பாலும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வென்சர் கேபிடல் நிறுவனங்கள், மூலதனம் சார்ந்த நிறுவனங்கள், தொழில்துறையின் சிறந்து விளங்கும் பிராண்டுகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகிவற்றுக்கு கடனுதவி செய்து வந்தது.
கலிஃபோர்னியா கட்டுப்பாட்டாளர்கள் இந்த வங்கியை மூடியுள்ளனர். இதையடுத்து இந்த வங்கியின் முழுக் கட்டுப்பாட்டையும் அமெரிக்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கீழ் கொண்டு வந்துள்ளனர். வங்கியின் படுமோசமான நிதி நிலையை அறிந்த டெபாசிட்தாரர்கள் விரைந்து தங்களது பணத்தை எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, வங்கி திவாலானது.
எவ்வாறு இந்த வங்கி திவாலானது?
* கடந்த புதன் கிழமை வங்கியின் இருப்புநிலையை உயர்த்த 2.25 பில்லியன் டாலர் அளவிற்கு நிதி திரட்ட வேண்டும் என்று இந்த வங்கி தெரிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. வங்கியில் இருந்து தங்களது பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு வென்சர் கேப்பிடல் நிறுவனம் அறிவுறுத்தியது.
* இதையடுத்து நிறுவனங்கள் தங்களது பணத்தை திரும்ப எடுத்தன. நிறுவனங்கள் தங்களது பணத்தை எடுத்ததால், வங்கியில் பணம் இல்லை. இதை ஈடு கட்டுவதற்காக சிலிக்கான் வேலி வங்கி தன்னிடம் இருந்த விற்பனை பத்திரங்களை சுமார் 1.8 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டத்திற்கு விற்றது.
* இதையடுத்து வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளில் இந்த வங்கியின் பங்குகளின் மதிப்பு சர சரவென சரிந்தது.
* வெள்ளிக்கிழமை சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் விற்பனை முடங்கியது. இதன் பங்குகளை வாங்க வைப்பதற்கான முயற்சியையும் வங்கி கைவிட்டது. இதையடுத்து, பர்ஸ்ட் ரிபப்ளிக், பேக்வெஸ்ட் பான்கார்ப் மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவற்றின் பங்குகள் விற்பனையும் நிறுத்தப்பட்டன. இது அட்லாண்டிக்கின் இருபக்கங்களிலும் நிதி நெருக்கடி இட்டுச் சென்றது. பில்லியன் டாலர்கள் பங்குச் சந்தையில் காணாமல் போனது.
* வங்கி திவால் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்களை அழைத்து பணம் பாதுகாப்பாக இருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி கிரேக் பெக்கர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் உறுதியளித்தது போல் இல்லாமல் தடாலடியாக வங்கி திவாலானது.
* வியாழக்கிழமை முடிவும் தருவாயில் வங்கியில் இருந்து 42 பில்லியன் டாலர் பணத்தை டெபாசிட்தாரர்கள் எடுத்துள்ளனர். இதனால், பங்குச் சந்தையில் ரத்தக் களரி ஏற்பட்டது.
அமெரிக்க பெடரல் வங்கி கடந்த ஓராண்டாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. இதனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறிப்பாக டெக்னாலஜி துறையில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோ: பட்டமளிப்பு விழாவில் ‘சீனப்பெண்’ செய்த சேட்டை!.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.!!