பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தது. கடந்த 2014ம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல்செய்த போது வட்டிக்கு செலவிட்டதொகை, கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தது. கடந்த 2014ம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல்செய்த போது வட்டிக்கு செலவிட்டதொகை, கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 

மத்திய அரசின் வருவாயில் வட்டிக்கு செலவிடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை மணியடித்துள்ளனர்.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4-வது பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தார். ஒரு நிதி அமைச்சர் 4 பட்ஜெட் அல்லது அதற்கு அதிகமான பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் மொரார்ஜி தேசாய், பிரனாப் முகர்ஜி, மன்மோகன் சிங், அருண் ஜேட்லி ஆகிய தலைவர்கள் வரிசையில் நிர்மலா சீதாராமனும் இணைந்துவிட்டார்.

பட்ஜெட் என்பது சாமானிய மக்களுக்கு ஒரு செய்தி. அவ்வளவுதான்..! புதிய வரிவிதித்து விலையை ஏற்றியிருக்கிறார்களா அல்லது குறைத்திருக்கிறார்களா என்ற கேள்வியைத் தவிர்த்து பெரிதாக யாரும் கேட்பதில்லை. 

வருமானவரிச்சலுகை இருக்கிறதா என்று ஆர்வத்துடன் பட்ஜெட்டை கவனிப்பவர்கள் ஒட்டுமொத்த மக்கள்தொகையோடு ஒப்பிட்டால் மிகக்குறைவுதான். ஏனென்றால், வருமானவரி செலுத்துவோர் மக்கள் தொகை அடிப்படையில் சிறிய சதவீதம்தான். 
அதனால்தான் கடந்த சில பட்ஜெட்களாக சிறிய சதவீதம் இருக்கும் வரிசெலுத்தும் பிரிவினருக்காக எந்தவிதமான சலுகையையும் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. 

மாறாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முதலீட்டுச் செலவுமீது ஆர்வம் செலுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. தங்களுக்குத் தேவையான விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் சாமானியர்கள் பட்ஜெட்டின் மற்ற அம்சங்கள் குறித்து ஒதுங்கியே இருக்கிறார்கள். 

அவ்வாறு ஒதுங்கியிருக்கும் விஷயங்களில், தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பது அரசின் வட்டிச் செலவாகும். மத்திய அரசுக்கு வருவாயாக கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் வட்டிக்காக செலவிடும் தொகை குறித்து பெரிதாக யாரும் கவலைப்படுவதில்லை.
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பட்ஜெட்டில் வட்டி செலுத்தும் செலவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது எச்சரிக்கை மணி என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்குவந்தபோது, பட்ஜெட்டில் அரசுக்கான வட்டிச் செலவு ஆண்டுக்கு ரூ.3.80 லட்சம் கோடி. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் பட்ஜெட்டில் வட்டிக்கான செலவு, 3 மடங்கு அதிகரித்துள்ளது, அதாவது, பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட, 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.9.40 லட்சம் கோடி வட்டி செலுத்த மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசைப் பார்த்து பொருளாதார வல்லுநர்களும், அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளும் அடிக்கடி கூறும் குற்றச்சாட்டு, பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்து வருகிறது, நிதி திவால்நிலைக்கு தேசத்தை தள்ளுகிறது என்பதுதான்.

ஆனால், ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும், கடினமான நீரோடையிலும், சூழலிலும் பயணிக்க ஒரு அரசு வட்டிக்கான செலவைக் குறைத்து வைத்திருக்க வேண்டும் என்று பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், இந்த நம்பிக்கை அனைத்து சூழலுக்கும் பொருத்தமானதா என்பது சூழல்களைப் பொருத்ததுதான்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது பட்ஜெட்டில் வட்டிக்கான செலவு ரூ.3.80 லட்சம் கோடி, 2022-23ம் ஆண்டில் வட்டிக்கான செலவு ரூ.9.40 லட்சம் கோடி. ஏறக்குறைய இந்த 9 ஆண்டுகளில், ரூ.5.60 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
அரசின் ஒட்டுமொத்த செலவில் வட்டிக்கான செலவு கடந்த 2014ம் ஆண்டில் 23% இருந்தது. இது 2022-23ம் ஆண்டுபட்ஜெட்டில் 20 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த வருவாய் வரவில் வட்டிக்கான செலவு கடந்த 2014ம் ஆண்டில் 35% இருந்த நிலையில் 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் 43%ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 8% வட்டிச் செலவுஅதிகரித்துள்ளது.

வரிவருவாயில் வட்டிக்கான செலவு கடந்த 2014ம் ஆண்டு, 43% இருந்த நிலையில் இது 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் 49%மாக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 6% வட்டிச் செலவு அதிகரித்துள்ளது

ஜிடிபியில் வட்டிக்கான செலவு மட்டும் கடந்த 2014ம் ஆம்டில் 3.1% இருந்தநிலையில் 2021, மார்ச் 31ம் தேதி வரை, 4.7% இருக்கிறது. அதாவது1.6% ஜிடிபியில் வட்டிச் செலவு அதிகரித்துள்ளது.

2014ம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டின் மதிப்பு ரூ.15.90 லட்சம் கோடி. இது 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.39.44 லட்சம் கோடியாகும்.ஏறக்குறைய ரூ.23.54 லட்சம் கோடியாக விரிவடைந்துள்ளது.

விவரம்

2014 பட்ஜெட்(கோடிகளில்)

2022-23பட்ஜெட்(கோடிகளில்)

இடைவெளி

வட்டிச் செலவு

ரூ.3.80லட்சம் கோடி

ரூ.9.40 லட்சம்

ரூ.5.60 லட்சம்

ஒட்டுமொத்த செலவில் வட்டி

23%

20%

-3%

வருவாயில் வட்டி செலவு

35%

43%

8%

வரிவருவாயில் வட்டி செலவு

43%

49%

6%

ஜிடிபியில் வட்டி

3.1%

4.7(2021மார்ச்வரை)

1.6%

பட்ஜெட் மதிப்பு

ரூ.15.90லட்சம்

ரூ.39.44லட்சம்

ரூ.23.54 லட்சம்

நிதிப் பற்றாக்குறை

ரூ.5.25லட்சம்(4.6%)

ரூ.16.61(6.4%)

ரூ.11.36லட்சம்

குறிப்பு: ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள்

2014ம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 4.6% அதாவது ரூ.5.25 லட்சம் கோடியாகும். இது 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை, 6.4%, அதாவது, ரூ.16.61 லட்சம் கோடி. ஏறக்குறைய 9 ஆண்டுகளில் ரூ.11.36லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதில் உள்நாட்டுக்கடன் என்பது வெளிச்சந்தையில் பங்குப்பத்திரங்களை அரசு வெளியிட்டும், வங்கிகளிடம் இருந்தும், ரிசரவ் வங்கியிடம் இருந்தும் பெறும கடன். வெளிக்கடன் என்பது, மத்தியஅரசு, உலகவங்கி, பன்னாட்டு நிதியம், வெளிநாடுகளில் இருந்து பெறும் கடனாகும்.

வருவாயில் வட்டி செலுத்துவதில் இந்தியா, தனக்குஈடான நாடுகளைவிட தரத்தில் பின்தங்கிஇருக்கிறது. உலகவங்கி கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, உலக வங்கியிடம் பெற்ற கடனுக்காக உலக நாடுகள் சராசரி வட்டி 5.6%. இதில் சில நாடுகளுக்கு இரட்டை இலக்கத்திலும் வட்டிவீதம் இருக்கும், மிகவும் குறைவாகவும் இருக்கக்கூடும். இது அந்தந்த நாடுகளின் கிரெடிட் ரேட்டிங்கைப் பொறுத்து மாறுபடும்

விவரம்

31.03.2014

31.03.2021

வேறுபாடு

பொதுக்கடன்

ரூ.46.25 லட்சம் கோடி

ரூ.1,02,40,000 கோடி

ரூ.56.15 லட்சம் கோடி

பொதுக்கடனில் உள்நாட்டுக்கடன்

ரூ.42.12லட்சம் கோடி(91.07%)

ரூ.95,83,400 கோடி(93.58%)

ரூ.53,71,400 கோடி(95.65%)

பொதுக்கடனில் வெளிநாட்டுக்கடன்

ரூ.4.13லட்சம் கோடி(8.93%)

ரூ.6.57லட்சம் கோடி(6.42%)

ரூ.2.44லட்சம் கோடி(4.35%)

ஜிடிபி

ரூ.98,01,300 லட்சம் கோடி

ரூ.1,97,45,670 லட்சம் கோடி

ரூ.99,44,370 லட்சம் கோடி

பொதுக்கடனில் ஜிடிபி

47.20%

51.85%

54%

சராசரி வட்டி

8.2%

6.18%

எதிர்பார்க்கப்படும் கடன்

ரூ.1.35,87,900(31.03.22வரை)

ரூ.1.52,17,900(31.03.23வரை)

இதில் வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் தங்களின் வட்டிச் செலவை அதிகரித்துச் செல்லாமல் கட்டுக்குள் கொண்டுவரவே பார்க்கும். அந்த வகையில் ஜெர்மனி 1.5%, ரஷ்யா 2.6%, சீனா 2.8% வட்டி செலுத்துகின்றன. பிரிட்டன்6%, கனடா 5.9%, இத்தாலி 8.2%, அமெரிக்கா 15%வரை வட்டி செலுத்துகின்றன. ஆனால், 2018ம் ஆண்டு மதிப்பின்படி இந்தியா 23% வட்டி செலுத்தியது.

இதில் பட்ஜெட்டின் அளவு அதிகரிக்கப்படும்போது, வட்டி செலுத்தும் செலவு குறைவாக இருக்கும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வரிவருவாய் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்தபோதிலும்கூட, மத்தியஅரசின் வரிவருவாயில் பெரும்பகுதி வட்டிக்குச் செலவிடுவதுதான் கவலைக்குரிய அம்சமாகும். ஜிடிபியில் வட்டிக்கான சதவீதமும் அதிகரித்துள்ளது மத்திய அரசுக்கு பெரும் எச்சரிக்கை மணியாகும்.

பட்ஜெட்டில் நிலையான செலவுகள் என்று இருக்கும் அதற்கான தொகையை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அதாவது, ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், இதர செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால்,இந்த செலவுகளை உயரவிடாமல் கடந்த சிலஆண்டுகளாக மோடிஅரசு கட்டுப்படுத்தி வருகிறது. மானியத்தின் அளவை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் குறைத்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டில் மானியச் செலவு ரூ.3.20 லட்சம் கோடியாக இருந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.3.20 லட்சம்கோடிதான் மானியச் செலவு உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆட்சியில் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 22.50% மானியத்துக்காக செலவிடப்பட்டது, ஆனால், இதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு 8.2%மாகக் குறைத்திருக்கிறது.

இதற்கு மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடுதான் காரணம், இந்த உறுதி பொருளாதாரத்துக்கு அவசியமானது எனப் பொருளாதாரவல்லுநர்கள் பாராட்டுகிறார்கள்.

அதேசமயம், ஒட்டுமொத்த வருவாயில் வட்டிச் செலவு, சுமை தொடர்ந்து அதிகரிப்பது ஆரோக்கியமான போக்குஅல்ல, அதைக் குறைக்க வழிகளை அரசு கண்டறிய வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்குறைவு ஏற்பட்டு மந்தநிலைக்கு தள்ளும் எனவும் எச்சரிக்கிறார்கள் 

மத்திய அரசு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.1,04,278 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.86,200 கோடி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கு ரூ.25,172 கோடி. ஆனால், வட்டிக்கு ஓர் ஆண்டுக்கான செலவு ரூ.9.40லட்சம் கோடி. 
வட்டிசெலுத்தும் தொகையை வைத்து சுகாதாரத் துறையையும், கல்வித் துறையையும், குழந்தைகள் நலனையும் 4 முதல் 5 மடங்கு சிறப்பாக பராமரிக்க முடியும். வட்டிச்செலவு மனிதர்களின் நம்மதிக்கும் மட்டுமல்ல, தேசத்தின் நலனுக்கும் ஒரு கட்டத்துக்கு மேல் ஆபத்தானதுதான் .