டைம் பத்திரிகையின் 2025ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 நன்கொடையாளர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, நிகில் காமத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் நபர்களை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த டைம் (TIME) பத்திரிகை 2025ஆம் ஆண்டுக்கான மிகவும் செல்வாக்கு மிக்க 100 நன்கொடையாளர்கள் (TIME100 Philanthropy 2025) பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல், தொண்டு முயற்சிகள், நிதி உதவி மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய தலைவர்களை சிறப்பித்துள்ளது. இப்பட்டியலில் டேவிட் பெக்காம், மைக்கேல் ப்ளூம்பெர்க், ஓப்ரா வின்ஃப்ரே, மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் போன்ற சர்வதேசப் பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர்.

நிதி உதவி - இந்தியர்களின் பங்களிப்பு:

2025ஆம் ஆண்டு பட்டியலில், இந்திய வணிக உலகின் ஜாம்பவான் அசிம் பிரேம்ஜி 'டைட்டன்ஸ்' பிரிவில் கௌரவிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழும தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியும் குறிப்பிடத்தக்க அளவு நன்கொடையை வழங்கி வருகின்றனர். அதேவேளையில், ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் இளைஞர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்தியர்களின் இந்த உலகளாவிய அங்கீகாரம், நாட்டின் தொண்டு மனப்பான்மைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

அசிம் பிரேம்ஜியின் கல்விப் புரட்சி:

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி, இந்தியாவில் மிகவும் தாராளமான நன்கொடை வழங்குபவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். குறிப்பாக, இந்தியாவின் பொதுக் கல்வி முறையை மேம்படுத்துவதில் முதலீடு செய்து வருகிறார். 2013ஆம் ஆண்டில் 'கிவிங் ப்ளட்ஜ்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் இந்தியர் இவர்தான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தான் தொடங்கிய அறக்கட்டளைக்கு தனது விப்ரோ நிறுவனத்தின் பங்குகளில் இருந்து 29 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்.

பிரேம்ஜி அறக்கட்டளையின் சேவைகள்:

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 2023-2024ஆம் ஆண்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் கவனம் செலுத்தும் 940 நிறுவனங்களுக்கு 109 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியுள்ளது. இத்துடன், நாடு முழுவதும் உள்ள 59 கள அலுவலகங்கள் மற்றும் 263 கற்றல் மையங்கள் மூலம் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி, வருகிறது. இதன் மூலம் இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியுள்ளது.

கல்வி கொள்கை உருவாக்கத்திலும் இந்த அறக்கட்டளை முக்கிய பங்காற்றுகிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் மூன்றாவது வளாகம் கட்டுதல், கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு உதவித்தொகை வழங்குதல், 480க்கும் மேற்பட்ட குழந்தை பராமரிப்பு மையங்களை நிறுவுதல் ஆகியவை இவர்களது சமீபத்திய முயற்சிகளாகும்.

இளம் நன்கொடையாளர் நிகில் காமத்

36 வயதான நிகில் காமத், 'கிவிங் ப்ளட்ஜ்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். சுற்றுச்சூழல் மற்றும் கல்வித் திட்டங்களுக்காக பல மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், 'யங் இந்தியா பிலாந்த்ரோபிக் ப்ளட்ஜ்' (YIPP) என்ற தனது சொந்த அமைப்பைத் தொடங்கியுள்ளார். இது 100 மில்லியன் டாலருக்கு அதிகமான சொத்து கொண்ட 45 வயதுக்குட்பட்ட இந்தியர்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தபட்சம் 25% ஐ நன்கொடையாக வழங்குமாறு வலியுறுத்துகிறது.

ரெயின்மேட்டர் அறக்கட்டளையின் செயல்பாடுகள்:

நிகில் மற்றும் நிதின் இருவரும் இணைந்து தங்கள் 'ரெயின்மேட்டர் அறக்கட்டளைக்கு' 100 மில்லியன் டாலருக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளனர். இது காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது. இதற்கிடையில், YIPP அமைப்பு 8 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டி, 300 பள்ளிகளுக்கு கணினிகள், தொழில் ஆலோசனை வழங்குதல் போன்ற திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது.