டெஸ்லா மாடல் 3 பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட சூப்பர்சார்ஜிங் பில் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 

சீனாவில் வசிக்கும் டெஸ்லா மாடல் 3 வாடிக்கையாளருக்கு சூப்பர்சார்ஜிங் பில் 6 லட்சம் டாலர்களாக அனுப்பப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு டெஸ்லா செயலியில் இருந்து குறுந்தகவல் வந்திருக்கிறது. அதில் வாடிக்கையாளரின் எலெக்ட்ரிக் கார் டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நெட்வொர்க்கில் இருந்து தடை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. சார்ஜருக்கான தொகையை செலுத்தாமல் இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வாடிக்கையாளரின் அக்கவுண்டில் சூப்பர்சார்ஜிங் கிரெடிட் பாக்கி இருந்த போதிலும் அதிக தொகைக்கான பில் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதிக தொகையை பார்த்து அதிர்ந்த வாடிக்கையாளர் உடனடியாக டெஸ்லா வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்தார். பின் டெஸ்லா தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பயனரின் டெஸ்லா செயலியில் அவர், 1923720 கிலோவாட் பவர் மின்திறனை பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி ஒரு கிலோவாட் ஹவர் மின்திறனுக்கு 2 CNY வீதம் இத்தகைய தொகை பில்லாக கணக்கிடப்பட்டு உள்ளது. இத்தகைய மின்திறனை கொண்டு டெஸ்லா மாடல் 3 ஸ்டாண்டர்டு ரேன்ஜ் பிளஸ் மாடலை சுமார் 32 ஆயிரம் முறை முழுமையாக சார்ஜ் செய்திட முடியும்.

பின்னர் அதிக தொகை பில்லாக வந்ததற்கு தொழில்நுட்ப குறைபாடு தான் காரணம் என டெஸ்லா சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு தெரிவித்தது. மேலும் இந்த குறைபாடு விரைவில் சரி செய்யப்படும் என்றும் டெஸ்லா தெரிவித்தது. இதேபோன்று மேலும் சில வாடிக்கையாளர்களுக்கும் அதிக தொகை பில்லாக அனுப்பப்பட்டு இருப்பதும் டெஸ்லா கொடுத்த பதிலில் தெரியவந்துள்ளது. 

டெஸ்லா சூப்பர்சார்ஜர் நெட்வொர்க் டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு சந்தா முறையில் வழங்கப்படும் சார்ஜிங் வசதி ஆகும். இது ஒரு ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் ஆகும். இது டெஸ்லா கார்களை சார்ஜ் செய்வதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற நிறுவன கார் மாடல்களையும் இங்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். 

சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு இதர நாடுகளிலும் டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 எலெகெட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா மாடல் 3 அந்நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.