டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்ட் முன்பதிவுகள் துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர் வெளியான நிலையில், தற்போது முன்பதிவு துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இந்த மாடலில் வழங்கப்பட இருக்கும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் டூயல் கிளட்ச் யூனிட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 86 பி.எஸ். பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. தற்சமயம் விற்பனையாகி வரும் அல்ட்ரோஸ் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே டியாகோ, டிகோர், பன்ச் மற்றும் நெக்சான் போன்ற மாடல்களில் AMT ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில், தற்போது அல்ட்ரோஸ் மாடலிலும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது. டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

தற்போது அல்ட்ரோஸ் மாடலில் வழங்கப்பட இருக்கும் DCT யூனிட் இதுவரை எந்த டாடா கார்களிலும் வழங்கப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் புதிய அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை அதன் மேனுவல் மாடல்களை விட ரூ. 1 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

டாடா அல்ட்ரோஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல்களின் விலை ரூ. 8.07 லட்சத்தில் துவங்கி ரூ. 9.42 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்ட் ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போல் மற்றும் புதிய மாருதி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.