இந்திய ஐடி துறையின் தலைவனாக வளம் வரும் டாடா குழுமத்தின் ஐடி சேவை நிறுவனம் டிசிஸ் அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீஸ். கொரோனா தோற்று காரணமாக  ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  டிசிஎஸ் நிறுவனத்தின் நேர்மறை வளர்ச்சி பெருமளவில் பாதித்து இருப்பதாகவும், அதே நேரத்தில் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கொரோனா நிவாரண நிதியாக ரூ.1500 கோடியை அள்ளி வழங்கினார். தமிழகத்திற்கு  40 ஆயிரம் பிசிஆர் கருவிகளை கொடுத்து பாராட்டை பெற்றார். இந்த நேரத்தில் அனைத்து நிறுவனங்களும், நஷ்டத்தை சந்தித்து, ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவித்து வருகின்றன. இந்நிலையில் டாடா நிறுவனத்திற்கும் இந்த நிலைமை ஏற்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.

நாட்டின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் மார்ச் காலாண்டில் ரூ.8,049 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது தொடர்பான விவரங்களை அதன் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கோபிநாதன் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ''கொரோனா தொற்று காரணமாக நடப்பு நிதி ஆண்டில் முதல் இரண்டு காலாண்டுகள் சற்று கடினமானதாக இருக்கும்.

மார்ச் காலாண்டில் ரூ.8,049 கோடியை நிகர லாபமாக ஈட்டிய போதிலும், இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.8,126 கோடியுடன் ஒப்பிடுகையில் சிறிய சரிவாகும். ஆனாலும், பணியாளர்கள் யாரையும் வேலையை விட்டு அனுப்பும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் கல்லூரி நேர்காணலில் தேர்வான மாணவர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்’’எனத் தெரிவித்துள்ளார். இது அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. டாடா நிறுவனத்தின் மனப்பான்மையை மக்கள் பலரும் போற்றி வருகின்றனர்.