டாடாவின் ராஜ்ஜியம்; 2வது ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்கிய TATA! இத்தனை பேருக்கு வேலையா?
டாடா நிறுவனம் இந்தியாவில் 2வது ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்கியுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறையில் வலுவாக காலுன்றியுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ்
டாடா நிறுவனத்தின் 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' பிரிவு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி ம்ற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், தனது சந்தையை விரிவுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இரண்டாவது ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை டாடா வாங்கியுள்ளது. அதாவது சென்னையை தலைமையிடமாக கொண்ட பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தில் சுமார் 60% பங்குகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
தைவான் நிறுவனமான பெகாட்ரான் டெக்னாலஜி தொழிற்சாலை கர்நாடகாவின் நர்சபுராவில் அமைந்துள்ளது. இந்த பிரிவில் 60 சதவீத கட்டுப்பாட்டு பங்குகளை வாங்கியுள்ளதாக டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான நிதி விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த ஆலையை வாங்கியதன் மூலம் இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சந்தையில் டாடா மிக அழுத்தமாக காலூன்றியுள்ளது.
ஐபோன் உற்பத்தி ஆலை
பெகாட்ரான் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான பெகாட்ரான் இந்தியா, ஆப்பிள் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இதன்மூலம் டாடா இனிமேல் ஆப்பிளுக்கு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் பணியில் தீவிரமாக களமிறங்க உள்ளது.
மேலும் இந்த ஆலையின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்தர எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகளை வழங்குவதில் டாடா குழுமம் கவனம் செலுத்த இருக்கிறது. இது தொடர்பாக டாடா எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரந்தீர் தாக்கூர் கூறுகையில், ''பெகாட்ரான் டெக்னாலஜியுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் AI, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தியின் புதிய சகாப்தத்தை தொடங்க இருக்கிறோம்'' என்றார்.
5,00,000 வேலைவாய்ப்பு
டாடா நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறையை தொடர்ந்து வலுவாக்கி வருகிறது. குஜராத்தின் தோலேராவில் ரூ.91,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் அமைத்து வருகிறது. அசாமின் ஜாகிரோட்டில் குறைக்கடத்தி சில்லுகளை அசெம்பிள் செய்து சோதனை செய்வதற்காக மேலும் ரூ.27,000 கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.
வாகனம், மொபைல் சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான குறைக்கடத்தி சில்லுகளை உற்பத்தி செய்து உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதில் டாடா தீவிரமாக இருக்கிறது. செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொடர்பான தொழில்கள் போன்ற துறைகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 5,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.