SUPREME COURT RAISED QUESTION TO reserve bank and cent govt

செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற மக்களுக்கு ஏன் மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்க ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, புழக்கத்தில் இருந்த ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய்களை டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அந்த காலக்கெடு முடிந்தபின், கையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மக்கள், குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளையில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கேட்கும் ேகள்விகளுக்கு விளக்கம் அளித்து, மாற்றிக்கொள்ளலாம் என அரசு சார்பில் கூறப்பட்டது.

ஆனால், டிசம்பர் 30-ந் தேதிக்கு பின் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மக்களால் ரிசர்வ் வங்கி கிளைகளில் கொடுத்து மாற்ற முடியவில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடு சுற்றுலா சென்றவர்கள் கூட அலைக்கழிக்கப் பட்டனர்.

இதை எதிர்த்து சர்த் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர், டி.ஒய்.சந்திரசூத், எஸ்.கே. கவுல் அடங்கி அமர்வு முன் நேற்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.

அப்போது, ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ ஜனவரி 1 முதல் மார்ச் 31-ந் தேதி வரை ரூபாய் நோட்டு தடை காலத்தில் வெளிநாடுகளில் வசித்தவர்கள், வெளிநாடு சுற்றுலா சென்றவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே செல்லாத ரூபாய்களை மாற்றிக்கொள்ள அனுமதி தரப்பட்டது'' என்றார்.

அப்போது, பொதுமக்கள் கையில் இருக்கும் செல்லாத ரூபாய்களை மார்ச் 31-ந்தேதி வரை மாற்றிக்கொள்ள ஏன் ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும், மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.