Sri Lanka crisis 2022: 'நாங்க பிச்சைஎடுக்கிறோம்': இலங்கை மக்கள் கண்ணீர்: 10மணிநேரம் மின்வெட்டு, மருந்தில்லை
sri lanka crisis 2022:இலங்கையில் இன்று முதல் தினசரி 10 மணிநேரம் மின்வெட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் மருத்துவமனைக்குச் சென்றாலும் நோய்க்கு மருந்து, மாத்திரைகள் கூட வாங்க முடியாத மோசமான நிலை நீடிக்கிறது.
இலங்கையில் இன்று முதல் தினசரி 10 மணிநேரம் மின்வெட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் மருத்துவமனைக்குச் சென்றாலும் நோய்க்கு மருந்து, மாத்திரைகள் கூட வாங்க முடியாத மோசமான நிலை நீடிக்கிறது.
மோசமான நிலை
ஏற்கெனவே சமையல் செய்யத் தேவைப்படும் சமையல் எரிவாயு, மண்எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது, அதைவாங்கவும் மக்கள் தினசரி நீண்டவரிசையில் காத்துக்கிடக்கும் பரிதாபநிலை இருக்கிறது. இனிமேல் தினசரி 10மணிநேரத்துக்கும் மேலாக இருளில்தான் மக்கள் வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சி
இலங்கைப் பொருளாதாரம் மிகவும் மோசான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இறக்குமதி அதிகரித்து, அன்னியச்செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. உள்நாட்டிலும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு, தானியங்கள்,அரிசி, பருப்பு விலையும் உயரத்தொடங்கியது.
நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதாரம் சரிந்து, கடந்த பிப்ரவரி மாதம் 2,310 கோடி டாலர் அன்னியச் செலாவணி மட்டுமே கையிருப்பு இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பும் 285 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவிலேயே மிக அதிகபட்சமாக இலங்கையில் பணவீக்கம் 15.1% இருக்கிறது, உணவுப்பணவீக்கம் 25% அதிகரித்துள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.
மருந்தில்லை
கொழும்பு நகரைச் சேர்ந்த பெண் சகாயராணி என்பவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ நான் மண்எண்ணெய் வாங்குவதற்காக கடந்த 5 மணிநேரமாக வரிசையில் நின்றுவருகிறேன். ஆனால், மண்எண்ணெய் கிடைக்கவில்லை. வரிசையில் நின்றிருந்தவர்களில் 3 பேர் ஏற்கெனவே மயங்கிவிழுந்துவிட்டார்கள். என் கணவரும், மகனும் வேலைக்குச் சென்றுவிட்டதால் வேறுவழியின்றி நான் வரிசையில் நிற்கிறேன்.
காலையிலிருந்து இதுவரை ஏதும் சாப்பிடவில்லை. சோர்வாக இருக்கிறது, வெயிலும் கடுமையாக இருக்கிறது. வேறு என்ன எங்களால் செய்ய முடியும். நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றால்கூட மருந்தில்லை என்று கூறுகிறார்கள் ” எனத் தெரிவித்தார்
எரிபொருள் தட்டுப்பாடு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் துறைமுகங்களில் சரக்குகளை இறக்கவும், ஏற்றவும் லாரிகள் செல்ல முடியவில்லை. உணவுப்பொருட்கள், தேயிலை, கட்டுமானப் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
பல்வேறு மருத்துவமனைகளில் தினசரி செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் கூட நிறுத்தப்பட்டுவிட்டன, பள்ளிகளில் காகிதம் வாங்க நிதியில்லாததால், மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
பிச்சை எடுக்கிறோம்
கொழும்பு நகரைச் சேர்ந்த மூதாட்டி வடிவு கூறுகையில் “ நான் 60 ஆண்டுகளாக கொழும்பு நகரில் வசிக்கிறேன், இதுபோன்ற மோசமான நிலையை சந்தித்தது இல்லை. சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் ஏதுமில்லை. அரசியல்வாதிகள் சொகுசாக வாழ்கிறார்கள், நாங்கள் தெருவில் பிச்சை எடுக்கிறோம். சிகிச்சைக்கு மருத்துவமனை சென்றால் மருந்தில்லை”என வேதனையுடன் தெரிவித்தார்
இதனிடையே இலங்கை முழுவதும் இன்று முதல் தினசரி 10மணிநேரம் மின்தடை கொண்டுவரப்படும் என்று இலங்கை மின்வாரியம் அறிவித்துள்ளது.
நிர்வாகக் குறைபாடு
கொழும்பு நகரைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் தலைவர் முர்தாசா ஜாபர்ஜி கூறுகையில் “ இலங்கை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிர்வாகக் குறைபாடுதான் இந்த மோசமான நிலைக்கு தள்ளியிருக்கிறது. பற்றாக்குறை பட்ஜெட், தொடர்பில்லாத வரிவிதிப்பு, மின்சாரத்துக்கு அதிகபட்ச மானியம்இவற்றால் இலங்கையில்வாழும் பணக்காரர்கள்தான் பலன்பெற்றார்கள்.
தவறான கொள்கை
மக்களின் பணத்தை எல்லாம் மிகப்பெரிய திட்டங்களுக்கு இலங்கை அரசு திருப்பிவிட்டது. இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம் எனக் கூறி, உர இறக்குமதியாளரை ஆட்சியாளர்கள் சாடினார்கள். ஆனால், இயற்கை விவசாயமும் தோல்வி அடைந்தது. ஆனால், உரத்தை வாங்கத்தான அரசிடம் பணமில்லை. இயற்கை விவசாயத்தை நம்பி களமிறங்கிய விவசாயிகள் வெறும் கையுடன் வீடுதிரும்பினார்கள். கடைசியில் அந்தக் கொள்கையை இலங்கை அரசு கைவிட்டது.
இப்போது சர்வதேச நிதியத்திடம் கையேந்துகிறது இலங்கை அரசு. இலங்கை நிலை இன்னும் மோசமாகும் என எதிர்பார்க்கிறேன். இதை கட்டுப்படுத்த ஆட்சியாளர்களால் முடியவில்லை. ஏனென்றால, இந்த சிக்கலை உருவாக்கியவர்கள்தான் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்