ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா செடான் மாடல் வினியோக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்லேவியா மிட்-சைஸ் பிரீமியம் செடான் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய ஸ்லேவியா மாடலின் இந்திய விலை மார்ச் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்லேவியா டெலிவரி தொடங்கும் தேதியை ஸ்கோடா அறிவித்து உள்ளது.
புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஸ்லேவியா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சக்கன் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

மார்ச் 28 ஆம் தேதி முதல் புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடலுக்கான வினியோகம் துவங்கும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்து இருக்கிறார். புதிய ஸ்லேவியா மாடல் 1.0 லிட்டர் TSi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் TSi பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இதன் 1 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பி.எஸ். பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பிற்கு புதிய ஸ்லேவியா மாடலில் ஆறு ஏர்பேக், ESC, எலெக்டிரானிக் டிஃபரென்ஷியல் சிஸ்டம் (EDS), ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
