share market today:மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை சரிவுடன் வர்த்தகம் தொடங்கியநிலையில் பிற்பகலுக்குப்பின் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட உற்சாகத்தால்  உயர்வுடன் முடிந்தது.

மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை சரிவுடன் வர்த்தகம் தொடங்கியநிலையில் பிற்பகலுக்குப்பின் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட உற்சாகத்தால் உயர்வுடன் முடிந்தது.

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச பங்குச்சந்தை நிலவரம் சாதகமாக அமைந்தது, ஆசிய, ஐரோப்பிய பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்தது இந்திய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது. இதனால் பிற்பகலுக்குப்பின் இந்தியப் பங்குச்சந்தையில்வர்த்தகம் ஜோராக நடந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு போன்ற காரணங்களால் மும்பைப் பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

பெடரல் வங்கி

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வந்துவிடும் என முதலீட்டாளர்கள் நினைப்புக்கு மாறாக போர் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்தவந்த கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 4 டாலர் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பெடரல் வங்கி கடந்தவாரம்தான் கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் அந்த வங்கியின் தலைவர் ஜோரம் பவெல் அளித்த பேட்டியில் “ பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்து பெடரல் வங்கி சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும். தேவைப்பட்டால் மேலும் 25 புள்ளிகள் வட்டியை அதிகரிப்போம்” எனத் தெரிவித்திருந்தார். இது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யா மீது தடை

மேலும், ஐரோப்பிய யூனியன் கவுன்சில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் முடிவு எடுக்கப்படலாம் என்பதால், பெரிதாக எந்த முதலீட்டையும் செய்யாமல் ஊசலாட்ட மனநிலையுடனே முதலீட்டாளர்கள் இருந்தனர்.

காலையில் சரிவு

இதனால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் சரிவுடனே தொடங்கியது. மும்பைப்பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 135 புள்ளிகள் சரிந்து, 57,157 புள்ளிகளில் தொடங்கியது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 30 புள்ளிகள் குறைந்து, 17,088 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

சூடுபிடித்த வர்த்தகம்

ஆனால், சர்வதேச சந்தைகள் உயர்வுடன் முடிந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் சந்தையில் பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சூடுபிடித்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள், மருந்துத்துறை, உலோகத்துறை பங்குகள் விலை ஏறியதையடுத்து, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். 

உயர்வு

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 696 புள்ளிகள் உயர்ந்து, 57,989 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 211 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17328 புள்ளிகளில் நிலைபெற்றது.

லாபம்

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 6 பங்குகள் சரிவுடன் முடிந்தன, 24 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. குறிப்பாக அல்ட்ரா டெக் சிமெண்ட், சன்ஃபார்மா, லார்சன் அன்ட் டூப்ரோ, மகிந்திரா அன்ட் மகிந்திரா, நெஸ்டிலே, இந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்வுடன் முடிந்தன. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் டெக் மகிந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ்,ஐடிசி, ஆகிய பங்குகள் லாபத்துக்கு கைமாறின