ரஷ்யா-உக்ரைன் பதற்றத்தால் மும்பை, தேசியப்பங்குசந்தைகள் 5-வது நாளாக சரிவு நீடிக்கிறது, வர்த்தகம் மோசமாகத் தொடங்கிய நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது

ரஷ்யா-உக்ரைன் பதற்றத்தால் மும்பை, தேசியப்பங்குசந்தைகள் 5-வது நாளாக சரிவு நீடிக்கிறது, வர்த்தகம் மோசமாகத் தொடங்கிய நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான தணியாத போர் பதற்றம், உக்ரைனின் கிழப்புக் பகுதிகளை சுயாட்சியாக ரஷ்யா அறிவித்தது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தவிருக்கும் அச்சம் பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே எதிரொலித்தது. 

இதனால் மும்பை பங்குச்சந்தையில் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து அடிமேல் அடி விழுந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்றதால், சென்செக்ஸ் 1100 புள்ளிகள்வரை சரிந்தது

வர்த்தகம் நேற்று மாலை முடிவில் 57,683 புள்ளிகளில் இருந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 56,408 புள்ளிகளாகச் சரிந்தது. தேசியப்பங்கு்சந்தையான நிப்டியில் 200 புள்ளிகள் சரிந்து 17,066புள்ளிகளுக்குச் சென்றது. 

இந்நிலையில் உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் செல்லாது என்ற ரஷ்யாவின் அறிவிப்பால் பங்குச்சந்தை சரிவிலிருந்து மீளத் தொடங்கியது. இருப்பினும் 5-வது நாளாக சரிவைத் தவிர்க்க முடியவில்லை. 

இன்று காலை ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ரஷ்யா உக்ரைன் பதற்றத்தால் கிரிப்டோகரன்சி மதிப்பும் சரிந்தது. 

வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 383 புள்ளிகள் புள்ளிகள் சரிந்து 57,300 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே சரிவிலிருந்து 900 புள்ளிகள்வரை மீண்டது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 114 புள்ளிகள் சரிந்து 17,050 புள்ளிகளில் முடிந்தது. 

உக்ரைனின் கிழக்குப்பகுதிகளை சுதந்திரம் பெற்றதாக ரஷ்யா அறிவித்தநிலையில், அந்த இரு பகுதிகளுக்கும் அமெரிக்கா நிதித்தடை விதித்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் ரஷ்யா பதற்றம் காரணமாக ஒரு பேரல் 99 டாலராக அதிகரித்தது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு உயர்வது இதுதான் முதல்முறையாகும்.