வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் புகைப்படங்கள் மூலம் மால்வேர் பரப்பப்பட்டு, வங்கிக் கணக்குகள் காலியாகின்றன. எஸ்பிஐ வங்கி இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய நிலையில் செல்போன் வைத்திருக்கும் பெரும்பாலானோர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். அன்றாட தகவல் பரிமாற்றத்திற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கும் கல்வி மற்றும் அலுவலக உபயோகங்களுக்காகவும் அனைவரும் வாட்ஸ்அப்பை பயன்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு வாட்ஸ்அப்பில் பயன்பாடு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு வாட்ஸ்அப்பை பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் டிஜிட்டல் Fraud இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தற்போது வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து புதிய மோசடி நடைபெற்று வருகிறது. மொபைலுக்கு வரும் ஒரு புகைப்படத்தின் வழியாக மால்வேர் பரப்பப்படுகிறது.

புகைப்படத்தை திறந்தால் வங்கிக் கணக்கு காலி

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் இணைப்புகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மொபைலில் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் ஹேக்கர்கள் மொபைலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுவார்கள் என்றும் எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.

எப்படி நடக்கிறது மோசடி?

முதலில் போலி எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியும் அதனுடன் ஒரு புகைப்படமும் வரும். நீங்கள் அந்தப் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது அறியாமல் ஏதேனும் இணைப்பை கிளிக் செய்தாலோ, உங்கள் மொபைலில் ஒரு தீங்கிழைக்கும் செயலி நிறுவப்படும். பின்னர் அந்த செயலி ஹேக்கருக்கு உங்கள் தொலைபேசியின் முழு கட்டுப்பாட்டையும் தானாகவே வழங்கிவிடும். இதன் விளைவாக, உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து வங்கிச் செயலிகள், குறுஞ்செய்திகள் மற்றும் ஓடிபி என அனைத்தும் ஹேக்கரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.அவர்கள் இந்தத் திட்டத்தை மிகவும் நுட்பமாகச் செயல்படுத்துவதால், சாதாரண மக்கள் எதையும் புரிந்துகொள்வதற்கு முன்பே மோசடிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

முடிந்த அளவு வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தியும் வைத்திருப்பது மிகவும் நல்லது. தெரியாத எண்களில் இருந்து வரும் எந்த செய்தியையும் படிக்க வேண்டாம் என்று கூறும் சைபர் கிரைம் போலீசார், வாட்ஸ்அப் வழியாக வரும் புகைப்படங்களை தொட்டால் வங்கி கணக்கு பூஜ்ஜியமாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.