ரத்தன் டாடாவின் உயிலில் சாந்தனு; எதிர்பாராத திருப்பங்கள்; வளர்ப்பு நாய்க்கு முதல் மரியாதை!!
சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உயில் எதையும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அவர் யார் யாருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார் என்று பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
தொழிலதிபர் ரத்தன் டாடா அக்டோபர் 9 ஆம் தேதி மும்பையில் காலமானார். இவரது மறைவு பலரையும் சோகமடைச் செய்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தாய், தந்தையை பிரிந்து சென்ற பின்னர், அவரது தந்தையும் வேறு திருமணம் செய்து கொண்டார். ரத்தன் டாடாவுடன் பிறந்தவர் ஒருவர் இருக்கிறார். ஆனால், அவர் ஒதுங்கியே இருக்கிறார். தந்தையின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த இவரது சகோதரர் நோயல் டாடா தான் தற்போது டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ரத்தன் டாடா உருவாக்கிய விதிகளால் டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா ஆக முடியாது என்றும் தற்போதும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தொழிலதிபர் ரத்தன் நேவல் டாடா, தனது ஜெர்மன் ஷெப்பர்ட் டிட்டோவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை உயில் மூலம் செய்து இருக்கிறார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கம் இந்தியாவில் இதுவரை இல்லை. முதன் முறையாக ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய்க்காக உயில் எழுதி இருப்பத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.
ரத்தன் டாடா தனக்கு சொந்தமான 10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து, அவரது அறக்கட்டளை, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய் (தனது தாயின் இரண்டாது திருமணத்தில் பிறந்தவர்கள்), வீட்டு ஊழியர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான பிறருக்கு சொத்துக்களையும் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவர் தனது வளர்ப்பு நாயான டிட்டோவை கவனித்துக் கொள்வார் என்று உயிலில் குறிப்பிட்டுள்ளார். டிட்டோவை கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ரத்தன் டாடா தத்து எடுத்து இருந்தார். இதற்கு முன்பு இருந்த நாய் இறந்துவிட அதே பெயரை இந்த நாய்க்கும் வைத்து வளர்த்து வந்தார். தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் உயில் எழுதி உள்ளார். தனது சர்வதேச நாடுகளின் பயணங்களின் போது இவர்களுக்காக ரத்தன் டாடா ஆடையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
டாடாவின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சொத்துகள் மற்றும் பங்குகள்:
இந்த உயிலில் குழு நிறுவனங்களில் உள்ள டாடாவின் பங்குகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவரது பங்குகள் அனைத்தும் டாடா குழுமத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு அறக்கட்டளையான ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு (RTEF) மாற்றப்படும். டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் RTEF தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சன்ஸ் பங்குகளுக்கு மட்டுமின்றி, டாடா மோட்டார்ஸ் போன்ற மற்ற டாடா குழும நிறுவனங்களில் ரத்தன் டாடாவின் பங்குகள் RTEFக்கு மாற்றப்படும். 2022 இல் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை, லாப நோக்கற்ற முறையில் செயல்பட்டு, குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. இதில் 2023 ஐபிஓவிற்கு முன் டாடா டெக்னாலஜிஸ் பங்குகளை வாங்கியது மற்றும் டாடா நியூவை இயக்கும் டாடா டிஜிட்டல் பங்கு ஆகியவை அடங்கும். RNT அசோசியேட்ஸ் மற்றும் RNT ஆலோசகர்கள் மூலம் அவரது தொடக்க முதலீடுகள் விற்கப்படும். மேலும் வருமானம் RTEF க்கு மாற்றப்படும்.
சாந்தனு நாயுடு:
ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவும், நாயுடுவின் துணை நிறுவனமான குட்ஃபெல்லோஸ் நிறுவனத்தில் டாடா தனது பங்குகளை கைவிட்டு, நாயுடுவின் வெளிநாட்டுப் படிப்புக்கான கடனைத் தள்ளுபடி செய்ததால், உயிலில் சாந்தனுவும் இடம்பெற்றுள்ளார்.
ரத்தன் டாடா வீடு:
மும்பை கொலாபாவில் ரத்தன் டாடா வசித்த வீட்டின் பெயர் ஹலேகாய். இது, டாடா சன்ஸ் துணை நிறுவனமான எவார்ட் இன்வெஸ்ட்மென்ட்டுக்கு சொந்தமானது. மேலும் அதன் எதிர்காலம் எவார்ட்டின் கையில் இருக்கிறது. இதேபோல் ரத்தன் டாடா அலிபாக்கிலும் ஒரு பங்களா கட்டினார். அதன் முடிவும் எவார்ட்டிடம் இருக்கிறது.
ரத்தன் டாடா கார்கள்:
ரத்தன் டாடாவுக்கு சொந்தமாக 20-30 சொகுசு கார்கள் உள்ளன. இவை அனைத்தும் அவரது கொலாபா இல்லம் மற்றும் தாஜ் வெலிங்டன் மியூஸ் அடுக்குமாடி குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை புனேவில் உள்ள டாடா குழுமத்தின் அருங்காட்சியகத்திற்காக வழங்கப்படலாம் அல்லது ஏலம் விடப்படலாம். டாடா சென்ட்ரல் தொகுப்புக்கு அவரது ஏராளமான விருதுகள் நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
பணக்காரர் பட்டியலில் ஏன் ரத்தன் டாடா இல்லை?
100 பில்லியன் டாலர் டாடா குழுமத்தை ரத்தன் டாடா வழிநடத்திய போதும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றதில்லை. இதற்குக் காரணம் அதிகமான பங்குகளை டாடா குழும நிறுவனங்களில் இவர் வைத்திருக்கவில்லை. இந்த நிலையில், அவரது உயில், முன்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி செய்வதற்கு பல மாதங்கள் ஆகலாம்.