இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாட்களில் 10வது முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன் படி, மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து இன்று வரை 10 முறை விலை உயர்ந்தப்பட்டு உள்ளது. கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ.7.20 வரை அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 108.21 க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.98.21 க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 104 டாலர் அளவுக்குக் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாட்களில் 10வது முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2 விலை விவரம்:
நகரங்கள் பெட்ரோல் (ரூபாய்) டீசல் (ரூபாய்)
டெல்லி 102.61 93.87
மும்பை 117.57 101.79
கொல்கத்தா 112.09 97.02
சென்னை 108.21 98.21
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது.
