மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டைவிட,  2022-23ம் நிதியாண்டு பட்ஜெட்டில்  நிதி குறைக்கப்பட்டதற்கு நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டைவிட, 2022-23ம் நிதியாண்டு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டதற்கு நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக மத்தியஅரசு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டதாக நாடாளுமன்றக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 100-நாட்கள் வேலைத் திட்டத்துக்காக ரூ.98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் ஊதியத்தை செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் பெறும் ஊதியத்தை பல்வேறு செலவுகளுக்கும் செலவிடும்போது கிராமப்புறப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதிலும் 2020ம் ஆண்டும் கொரோனா பெருந்தொற்று வந்தபோது, கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு நேரடியாக பணத்தைக் கொண்டு சேர்ர்த்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியது இந்த 100நாட்கள் வேலைத்திட்டம்தான். அப்போது தாக்கல் செய்தபட்ஜெட்டில் ரூ.1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது, ஏறக்குறைய 11 கோடி தொழிலாளர்கள் பயன் அடைந்தனர். ஆனால், 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.73ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது

கிராமப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு சிவசேனா எம்.பி. பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையில் அமைக்கப்பட்டது. வரும்பட்ஜெட்டில் 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டது குறித்து, கேள்வி எழுப்பி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் “ மகத்தான திட்டமான 100 நாட்கள் வேலைவாய்ப்புத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் தொகை போதுமான அளவில் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டால், பட்ஜெட்டின் நடுப்பகுதியில் நிதிப்பற்றாக்குறை இருக்காது. தொழிலாளர்களுக்கு ஊதியம், பொருட்கள், உள்ளிட்டவற்றை தடையின்றி வழங்க முடியும். இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியத்தையும் அதிகப்படுத்த வேண்டும், வேலைநாட்களையும் உயர்த்த வேண்டும். 

கடந்த 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டிலிருந்து புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததிதல் குறிப்பிடத்தகுந்த நிதிஒதுக்கீடு உயர்வு ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது. ஆனால், அதேசமயம், இந்த திட்டத்துக்கான தேவையும் நிதிஒதுக்கீடு அளவைவிட அதிகமாக இருக்கிறது.

2021-22ம் நிதியாண்டில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. புலம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் பணிக்குச் செல்வார்கள் என்பதால், நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை நாட்கள் இந்த திட்டம் நடக்கிறது என்பதை மனதில் வைத்து நிதி ஒதுக்க வேண்டும்.

2022-23ம் நிதியாண்டில் 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு ரூ.73ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிலும் இதே தொகை ஒதுக்கப்பட்டாலும், இடையில் 25 சதவீதம் நிதி உயர்வு அளிக்கப்பட்டு ரூ.98ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் நடப்பு நிதியாண்டில் 100நாட்கள் வேலைத் திட்டத்துக்கான நிதி அறிக்கையைப் பார்த்தால், ரூ.15,683 கோடி பற்றாக்குறையில்தான் இருக்கிறது

வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் படி(அலவன்ஸ்) மிகக்குறைவாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் நவம்பர் 5-ம் தேதிவரை வேலையில்லாதவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3000, மற்றும் ரூ.12 ஆயிரம் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் வேலை வழங்காவிட்டால் அவர்களுக்கு நிதியுதவி வழங்குவது கட்டாயமாகும்.

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பணியாற்றவர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் ஏராளமான தாமதங்கள் நடந்துள்ளன. இவை அனைத்தையும் களைந்து, அந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருக்கும் ரூ.2,364 கோடியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதற்கும், நிலுவை வைத்திருப்பதற்கும் பல்வேறு காரணங்களைத் தெரிவித்தாலும், எந்த காரணமும் திருப்தியாகாது.

100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தற்போதுதினசரி ரூ.334 வழங்கப்படுகிறது. இதை, நுகர்வோர் பணவீக்கத்துக்கு ஏற்ப ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், ஊதிய அளவு மிகக்குறைவாக இருக்கிறது. அதேபோல 100 நாட்கள் என்பதை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்”

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது