ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதுவித வியாபார முறையை பின்பற்றுவதால் சில யூனிட்கள் தற்காலிக பதிவு செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றன.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 2022 மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 7 ஆயிரம் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் மாடல்களை வினியோகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாகன பதிவு செய்யும் வலைதளத்தின் படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 3904 யூனிட்களை பதிவு செய்து இருந்தது. கடந்த மாதத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2042 யூனிட்களை பதிவு செய்து இருந்தது. டைரக்ட் டு கஸ்டமர் வியாபார மாடல் காரணமாக சில யூனிட்கள் தற்காலிக பதிவுடன் வினியோகம் செய்யப்படுவதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. 

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான இரண்டாம் கட்ட விற்பனையை ஜனவரி 2022 வாக்கில் துவங்கியது. அமோக வரவேற்புக்கு ஏற்ற வகையில் ஸ்கூட்டர்களின் உற்பத்தியும் வேகப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், ஓலா எஸ்1 ப்ரோ மாடலின் சில அம்சங்கள் எப்போது வழங்கப்படும் என்ற விவரங்களை ஓலா எலெக்ட்ரிக் அறிவிக்கவில்லை.

இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை பலமுறை தாமதமாகி பின் தொடங்கியது. ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஓலா எஸ்1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது. ஓலா எஸ்1 ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும். இரு ஸ்கூட்டர்களும் முறையே அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் மற்றும் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன.