Nitin Gadkari news: தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 60 கி.மீ தொலைவுக்கும் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும். 60 கி.மீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் ஏதேனும் இருந்தால், அது அடுத்த 3 மாதங்களுக்குள் மூடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சங்கச்சாவடிக்கும் இடையே 60 கி.மீ தொலைவுக்குள் வேறு ஏதேனும் சுங்கச்சாவடி இருந்தால் அது அடுத்த 3 மாதங்களுக்குள் மூடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சார்பில் மானியக் கோரிக்கை விவாதம் நேற்று மக்களவையில் நடந்தது.அதில் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

சுங்கச்சாவடி
இனிவரும் காலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் 60கி.மீ தொலைவுக்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன். 60 கி.மீ தொலைவைக் கடந்தபின்புதான் 2-வது சங்கச்சாவடி இருக்கும். 60 கி.மீ தொலைவுக்குள் ஏதேனும் சுங்கச்சாவடி இருந்தால், அது அடுத்த 3 மாதங்களில் மூடப்படும். இதன் மூலம் வாகன ஓட்டுநர்கள் தடையின்றி பயணிக்க முடியும். சங்கச்சாவடிக்கு அருகே குடியிருப்போருக்கு ஆதார் கார்டு அடிப்படையில் பாஸ் வழங்குவது குறித்தும் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

மாற்று எரிபொருள்
விரைவில் பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டுவரப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் பெட்ரோலில் இயக்கப்படும் கார், ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவற்றின் விலையும், பேட்டரியில் இயக்கப்படும் கார், ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவற்றின் விலையும் ஒரே இணையாக கொண்டுவரப்படும்.
டெல்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும் ரூ.62ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சாலை அமைப்பு வேகம்

சாலைவசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. டெல்லி முல் மீரட் வரை முன்பு 4 மணிநேரம் பயணிக்க வேண்டியது இருந்தது. இப்போது, வெறும் 40 நிமிடங்களில் சென்றுவிடலாம். கட்டுமானச் செலவைக் குறைத்து, தரத்தை மேம்படுத்துவே திட்டமிட்டு வருகிறோம். தினசரி 38கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவு அதிகமாகும்.
டெல்லி முதல் ஜெய்பூர், டெல்லி முதல் ஹிரித்துவார் ஆகிய நகரங்களுக்கு இனிமேல் 2 மணிநேரத்தில் சென்றுவிடமுடியும். டெல்லி முதல் அமிர்தசர் நகருக்கு 4 மணிநேரத்தில் சென்றடைய முடியும்
இ்வ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்
