மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பாராளுமன்றத்திற்கு வருகை தந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாக காலை 11 மணியளவில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். அதே போல நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் உரையை தொடங்கும் போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீயை தனது உரையில் நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். எதிர்கால இந்தியாவை உருவாக்குவதில் அருண் ஜெட்லீயின் பங்கு மகத்தானது என்றார். நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், வருவாயை உயர்த்தவும் வாங்கும் திறனை மேம்படுத்தவும் பட்ஜெட் உதவும் என்றார். 

கடந்த 6 ஆண்டு கால மோடி அரசில் இந்தியா முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார். பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா 5 வது இடத்தில் இருப்பதாகவும் பொருளாதாரத்திற்கான அடித்தளம் வலுவாகவே இருப்பதாகவும் தெரிவித்தார். ஜி.எஸ்.டி அமலான பிறகு குடும்பங்களில் சேமிப்பு 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அதன்மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குடையின் கீழ் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.