Alfa Romeo 2030 : அடுத்த ஸ்போர்ட்ஸ் கார் வேற லெவலில் இருக்கும் - மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஆல்ஃபா ரோமியோ
ஆல்ஃபா ரோமியோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆல்ஃபா ரோமியோ நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இந்த தசாப்தத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தின் துணை பிராண்டான ஆல்ஃபா ரோமியோ ஆடம்பர கார் மாடல்கள் பிரிவில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. ஆல்ஃபா ரோமியோ தலைமை செயல் அதிகாரி ஜீன் பிலிப் இம்பரேடோ புதிய லிமிடெட் எடிஷன் மாடல்கள் உருவாக்கப்படுவதாகவும், இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
எதிர்கால ஸ்போர்ட்ஸ் கார் டிசைன்கள் ஆல்ஃபா ரோமியோ ஸ்பைடர் டுயெட்டோ என அழைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார். எதிர்கால மாடல்கள் ஆல்ஃபா ரோமியோ பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
"இப்போதைக்கு என்னால் எதையும் உறுதியாக கூற முடியாது. எனினும், ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவிக்கிறேன். நான் கடந்த காலத்தை மறக்க மாட்டேன். நான் வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். திட்டமிடல்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். அதே நேரம் நாங்கள் பல்வேறு திட்டங்களில் ஒரே சமயத்தில் பணியாற்றி வருகிறோம்," என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஆல்ஃபா ரோமியோ நிறுவனம் புதிதாக டொனேல் எனும் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது. இது காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இது அந்நிறுவன தலைவிதியை மாற்றுவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாடலாக பார்க்கப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க நிறுவனம் என்ற போதிலும் ஆல்ஃபா ரோமியோ நிறுவனம் இரண்டு ஆல்ஃபா ஸ்போர்ட்ஸ் கார்களை மட்டுமே இந்த நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஆல்ஃபா ரோமியோ 8C மற்றொன்று சமீபத்தில் அறிமுகம் சதெய்யப்பட்ட ஆல்ஃபா ரோமியோ 4C ஆகும். இரு மாடல்களும் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றன.