ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் அமீரை தோஹாவில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகும். கத்தார் ரிலையன்ஸ் வணிகங்களில் முதலீடு செய்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானி, புதன்கிழமை தோஹாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் அமீர் ஆகியோரை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பானியின் இந்தப் பயணம் உலகின் முக்கியத் தலைவர்களுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சி என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் கத்தாரில் உள்ள முக்கிய நபர்களுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொடர்புகளை வலுப்படுத்த முயலும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கத்தாரின் அரசின் நிறுவனமான கத்தார் முதலீட்டு ஆணையம் (QIA) ரிலையன்ஸ் வணிகங்களில் பல முதலீடுகளை செய்துள்ளது.
ஆசியாவின் பணக்காரரான அம்பானி, கூகுள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுடன் குறிப்பிடத்தக்க கூட்டணிகளையும் வைத்துள்ளார்.
தோஹாவில் உள்ள லுசைல் அரண்மனையில் டிரம்ப்பை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விருந்தில் அம்பானியும் கலந்துகொள்ள உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வின்போது அவர் எந்த முறையான வணிக அல்லது முதலீட்டு பேச்சுவார்த்தைகளையும் நடத்த வாய்ப்பில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
டிரம்ப் மற்றும் கத்தார் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பிரமுகர் ஒருவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை. அம்பானியின் விரிவான பயணத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுபற்றி விசாரித்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பதிலளிக்கவில்லை.
பிப்ரவரியில் கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகைக்குப் பிறகு அம்பானி அவரைச் சந்திக்க தோஹா செல்வது கவனிக்கத்தக்கது. அமீரின் இந்தியப் பயணத்தின்போது, கத்தார் பல்வேறு இந்தியத் துறைகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்தது.
கத்தாரில் தனது சந்திப்புகளுக்குப் பிறகு, டிரம்ப் வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளார். அங்கு அவர் முதலீட்டு முயற்சிகளில் அதிக கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
