மைக்ரோசாஃப்ட் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, இதில் பெரும்பாலோர் மென்பொருள் பொறியாளர்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதே இதற்குக் காரணம். 

6 ஆயிரம் பேர் வேலையிழப்பு

சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது 3% ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நிறுவனத்தில் அதிகம் பயன்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் மென்பொருள் பொறியாளர்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மென்பொருள் பிரிவை சேர்ந்த 40% பேர் பாதிப்பு

வாஷிங்டனில் உள்ள அலுவலகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 40% பேர் மென்பொருள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நிறுவனம் ஏஐ கருவிகளில் கவனம் செலுத்தி, ஊழியர்களை அவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து வந்தது. இதையடுத்து, சில ஊழியர்கள் ஏஐ அடிப்படையிலான கருவிகளை உருவாக்கினர். ஆனால், அதே கருவிகள் பின்னர் அவர்களின் வேலைகளை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்பட்டன.

ஊழியர்களை காவு வாங்கிய AI தொழில்நுட்பம்

மைக்ரோசாஃப்டின் உயர் நிர்வாகி ஜெஃப் ஹல்ஸ், தனது குழுவில் உள்ள 400 பேரிடம், ஓபன்ஏஐ சாட்பாட்களைப் பயன்படுத்தி 50% குறியீடுகளை முடிக்க சில வாரங்களுக்கு முன்பு அறிவுறுத்தி இருந்ததாக தெரிகிறது. தற்போது இந்தக் குழுவும் பணிநீக்கத்தில் சிக்கியுள்ளது. தாங்களே உருவாக்கிய தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் குறியீட்டாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், தொழில்நுட்ப திட்ட மேலாளர்கள், ஏஐ திட்டங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மைக்ரோசாஃப்டின் ஒரு ஸ்டார்ட்அப்பில் ஏஐ இயக்குநராக இருந்த கேப்ரியல்லா டிகிரோஸ் தனது பதவியை இழந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்தவர்கள் வேலை இழப்பது வேதனையளிக்கிறது என்று கூறினார்.

திறன் மேம்பாட்டு நடவடிக்கை - மைக்ரோசாஃப்ட்

2023ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் 10,000 பேரை பணிநீக்கம் செய்தது. தற்போதைய பணிநீக்கம் நிறுவன வரலாற்றில் இரண்டாவது பெரிய பணிநீக்கமாகும். நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் சில முக்கிய மாற்றங்களைச் செய்கிறோம் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேலாண்மை நிலைகளைக் குறைத்து, செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

முன்னதாக, மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, தங்கள் நிறுவனத்தில் தற்போது 30% குறியீடுகள் ஏஐ அடிப்படையிலான கருவிகள் மூலம் செய்யப்படுவதாகவும் தரத்தை மேம்படுத்துவதில் ஏஐ முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகளுக்குப் பிறகு சில வாரங்களிலேயே பணிநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வுகள் தொழில்நுட்பத் துறையில் ஏஐயின் தாக்கம் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.