எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது ZS EV வாடிக்கையாளர்களுக்கு இலவச சார்ஜிங் வசதியை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ZS EV வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2022 வரை இலவச சார்ஜிங் சேவையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஃபோர்டம் சார்ஜ் மற்றும் டிரைவ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து புதிய சலுகையை எம்.ஜி. மோட்டார் வழங்குகிறது. அதன்படி ஃபோர்டம் சார்ஜ் மற்றும் டிரைவ் சார்ஜிங் நெட்வொர்க்கில் ZS EV வாடிக்கையாளர்கள் இலவச சார்ஜிங் செய்ய முடியும்.
மேலும் இந்த சலுகை CCS சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களின் எம்.ஜி. செயலியில் rs.0.0 per kW என தெரியும். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சார்ஜ் செய்ய வழக்கமான கட்டண முறைகளுக்கு மாறிவிடும்.

இந்திய சந்தையில் ZS EV எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிக ZS EV யூனிட்களை எம்.ஜி. மோட்டார் விற்பனை செய்து இருக்கிறது. எதிர்காலத்தில் மேலும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டு உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எலெக்ட்ரிக் காருக்கான டீசரை வெளியிட்டது. இந்த மாடலுக்கென சிறிய டீசர் வீடியோவை எம்.ஜி. மோட்டார் வெளியிட்டு இருக்கிறது. இது எம்.ஜி. 4 என அழைக்கப்பட இருக்கிறது. இதுதவிர இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை பிரிட்டனில் அறிமுகம் செய்ய எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.
