மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இதுவரை 40 கோடி கிலோமீட்டர்களை கடந்து சாதனை படைத்துள்ளன.

மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் இணைந்து இதுவரை சுமார் 40 கோடிக்கும் அதிக கிலோமீட்டர்களை கடந்துள்ளன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு இத்தனை கிலோமீட்டர்கள் கடந்து இருப்பது 40 ஆயிரம் மெட்ரிக் டன் CO2 எமிஷனை கட்டுப்படுத்தியதற்கு சமம் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. 

எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்த முதல் நிறுவனங்களில் மஹிந்திராவும் ஒன்று. மஹிந்திரா தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போது ரெவா எனும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை மஹிந்திரா கைப்பற்றியது. இந்த நிறுவனத்தின் பெயர் 2016 வாக்கில் மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் என மாற்றப்பட்டது. 

2013 ஆம் ஆண்டு e20 மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை மஹிந்திரா அறிமுகம் செய்து இருக்கிறது. இவெரிட்டோ மற்றும் e2o உள்ளிட்டவை தனி நபர் பயன்பாடுகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வர்த்தக பயன்பாட்டிற்கான இரண்டு எலெக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களை மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி அறிமுகம் செய்தது. 

மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரி எலெக்ட்ரிக்3-சக்கர வாகனங்களை அறிமுகம் செய்தது. இவை இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றன. பயனர்களுக்கு எரிபொருள் செலவில் அதிக தொகையை இவை மிச்சப்படுத்துவதால், இவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தையும் சேர்த்து மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் 40 கோடி கிலோமீட்டர்கள் எனும் மைல்கல்லை எட்டியது. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது.