எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடு இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில் அந்த தேதி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடு இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில் அந்த தேதி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100% பங்குகளில் வெறும் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கு ஐஆர்டிஏஐ ஒப்புதல் அளித்த நிலையில் வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. இந்த அறிக்கைக்கு பிஎஸ்இ, என்எஸ்இ அமைப்பும் அனுமதியளித்துவிட்டதால், அடுத்தவாரத்துக்குள் செபியும் ஒப்புதல் அளிக்கும். 

மத்திய அரசு 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை(870 கோடி டாலர்) திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன. இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. அதாவது எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரையிலும், பாலிசிதாரர்களுக்கு 5 % வரையிலும் தள்ளுபடி தரப்படலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை இதுவரை தெரியாத நிலையில், அது ரூ.2000 முதல் ரூ.2,100 வரை இருக்கலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் 31.60 கோடி பங்குகளை விற்பனை செய்யும்போது, ரூ.63 ஆயிரம் கோடி முதல் ரூ.65 ஆயிரம் கோடி வரை கிடைக்கலாம். பங்குகளுக்கு இருக்கும் தேவை, கிராக்கியைப் பொறுத்து பங்கின் விலை சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் உயரக்கூடும்.

இந்திய பங்குச்சந்தை கடந்த இரு வாரங்களாகவே தடுமாற்றத்துடன் செல்வதால், சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்தால் இழப்பு நேரிடுமோ எனும் அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர். மார்ச் மாதம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்தலாம் என்ற ஊகம், ரஷ்ய - உக்ரைன் எல்லை பிரச்சனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை பங்குச்சந்தையை நாள்தோறும் நிலையில்லாத் தன்மையில் விட்டுள்ளன.

 நாள்தோறும் நிலையில்லா சூழலை சந்தித்துவரும் இந்திய முதலீட்டாளர்கள் ம் எல்ஐசி ஐபிஓ-விற்காகக் காத்திருக்கிறார்கள்
மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஐபிஓ வெளீயிடு இருக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பங்குச்சந்தை நிர்வாகிகள் மூவர் அளித்த தகவலின்படி எல்ஐசி ஐபிஓ மார்ச் 11ம் தேதி இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த கேள்விக்கு எல்ஐசி தரப்பிலும், மத்திய நிதிஅமைச்சகம் தரப்பிலும் எந்தவிதமான பதிலும் இல்லை. 

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் முதலீட்டு விலக்கலில் இலக்கை அடைந்தால்தான் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க முடியும். அந்த வகையில் எல்ஐசி ஐபிஓ மூலம் ரூ.65ஆயிரத்துக்கு குறைவில்லாமல் கிடைக்கும் என்பதால் இதை தீவிரப்படுத்தி வருகிறது